௳ (முகப்பு)

View Original

ஆரணி புத்திரகாமேட்டீசுவரர் கோவில்

நீண்ட நாட்களாக குழந்தை வரம் வேண்டுவோருக்கு பலன் தரும் தலம்

காஞ்சிபுரத்திற்கு 63 கி.மீ. தென்மேற்கிலும், திருவண்ணாமலைக்கு 60 கி.மீ. வடக்கிலும் அமைந்துள்ளது ஆரணி புத்திரகாமேட்டீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் பெரிய நாயகி. குழந்தையற்ற தம்பதியருக்கு குழந்தை பாக்கியத்தை தரும் பிரதான வழிபாட்டுத் தலமாக இக்கோவில் விளங்குகிறது. கருவறையில் மூலவர் புத்திரகாமேட்டீசுவரர், ஒன்பது தலை நாகத்தின் கீழ் எழுந்தருளி இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

தல வரலாறு

அயோத்தியை ஆண்ட தசரத சக்கரவர்த்தி நீண்ட நாட்களாக தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று கவலை கொண்டிருந்தார். குலகுரு வசிஷ்டர் ஆலோசனைப்படி புத்திரகாமேஷ்டி யாகம் செய்து, இத்தலத்தில் சிவனை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதன்பின்னர், அவருக்கு ராமர், பரதன், லட்சுமணன். சத்ருக்கனன் என நான்கு பிள்ளைகள் பிறந்தனர். இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பிய தசரதர், அவருக்கு யாகத்தின் பெயரால் புத்திரகாமேட்டீசுவரர் என்றே பெயர் சூட்டினார். கோவிலுக்கு நேரே, வெளியில் தசரதருக்கும் சன்னதி உள்ளது. இவர் சக்கரவர்த்தியாக இல்லாமல், யாகம் நடத்தியபோது இருந்த அமைப்பில், முனிவர் போல கைகளில் ருத்ராட்ச மாலை. கமண்டலம் வைத்து காட்சியளிக்கிறார். தசரதர் தனிச் சன்னதி கொண்டு எழுந்தருளி இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான பிரார்த்தனை

திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு, இல்லாதவர்கள் புத்திரகாமேட்டீசுவரரை வழிபட விரைவில் அந்த பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தை வேண்டி, புத்திரகாமேட்டீசுவரரை வணங்குவோர், ஏழு திங்கட் கிழமை விரதமிருக்க வேண்டும். விரதம் துவங்கும் நாளன்று மதியம், ஒரு குழந்தைக்கு, நெய் சோறு தானமாக கொடுத்து, அதன் பின், சாப்பிட வேண்டும். இரண்டாம் வாரத்தில் 2 குழந்தைகள், மூன்றாம் வாரத்தில் 3 குழந்தைகள் என்ற அடிப்படையில் ஆறாவது திங்களன்று ஆறு குழந்தைக்கு அள்னதானம் பரிமாறி விரதமிருக்க வேண்டும். ஏழாவது திங்கள்கிழமையன்று இங்கு புத்திரகாமேட்டீசுவரருக்கு செவ்வலரிப்பூ மற்றும் கோயிலில் உள்ள பவன் மல்லி மாலை அணிவித்து, மிளகு சேர்ந்த வெண்பொங்கல் நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும். ஆனி பவுர்ணமியன்று சிவனுக்கு சிவாச்சாரியார்கள், புத்திரகாமேஷ்டி யாகம் நடத்துவர். இதிலும் கலந்து கொள்ளலாம். ஜாதகரீதியாக ஐந்தாம் இடத்தில் கேது இருந்தால் உண்டாகும் புத்திர தோஷம் நாக தோஷம் நீங்க கோயில் வளாகத்திலுள்ள வேம்பு ஆலமரத்தடியில் தங்கள் நட்சத்திர நாளில் நாக பிரதிஷ்டை செய்தும் புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தியும் வேண்டிக்கொள்கிறார்கள்.

ஒன்பது தலை நாகத்தின் கீழ் புத்திரகாமேட்டீசுவரர்

பெரிய நாயகி அம்பாள்

தசரத சக்கரவர்த்தி தனிச் சன்னதி

முனிவர் கோலத்தில் தசரத சக்கரவர்த்தி

See this map in the original post