௳ (முகப்பு)

View Original

திரிசூலம் திரிசூலநாதர் கோவில்

மன அமைதி தரும் திரிபுரசுந்தரி அம்மன்

சென்னை விமான நிலையம் எதிரில் அமைந்துள்ள திரிசூலம் ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திரிசூலநாதர் கோவில். பிரம்மன் வழிபட்ட தலம் இது. நான்கு வேதங்களே, நான்கு மலைகளாக இக்கோயிலைச் சுற்றி இருக்கின்றது. சுரம் என்றால் வளம் நிறைந்த மலை என்று பொருள். மலைகளுக்கிடையே வீற்றிருக்கும் இத்தல இறைவனுக்கு திருச்சுரமுடையார் என்றும் பெயர். இந்த திருச்சுரம் என்பது மருவி. பின்னர் திரிசூலமாகி விட்டது.

இறைவன் திரிசூலநாதர் லிங்க வடிவில் கிழக்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார். சுவாமி அருகில் சொர்ணாம்பிகை கருவறையில் இருக்க மற்றொரு பிரதான அம்பாள் திரிபுரசுந்தரி தனி சந்நிதியில், தெற்கு நோக்கி எழில்கோலத்துடன் அருள்புரிகிறாள். அம்பிகையின் திருக்கரங்களில் அட்சத மாலையும், தாமரைப் பூவும் திகழ்கின்றன. இதன் மூலம் ஞானத்தையும் செல்வத்தையும் ஒருசேர அருள்பிரசாதமாகத் தருகிறாள் அன்னை திரிபுரசுந்தரி.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் திரிபுரசுந்தரி அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சி தருவாள். அன்று அவளை வழிபடுவர்களுக்கு மன அமைதி உண்டாகும் என்பது நம்பிக்கை. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரிபுரசுந்தரிக்கு வெள்ளிக்கிழமைகளில் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதுவும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் பூப்பாவாடையுடன் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

திரிசூலநாதர் கருவறையில் சொர்ணாம்பிகை எழுந்தருளி இருப்பதற்கு, ஒரு பின்னணி வரலாறு உண்டு. அந்நியர் படையெடுப்பின்போது கோவிலில் இருந்த சொர்ணாம்பிகை தாயாரின் கையில் கட்டைவிரல் சேதமடைந்துவிடுகிறது. அதனால் பின்னப்பட்ட சிலையை வழிபடக்கூடாது என்று கூறி, தனியே வைத்துவிடுகிறார்கள். அப்போது அர்ச்சகரின் கனவில் வந்து தனது பின்னத்தை சரிசெய்து, மீண்டும் திரிசூலநாதரின் அருகே வைக்குமாறு தாய் அருள் கூற, அதன்படி சிலையின் பின்னப்பட்ட விரலுக்கு பதிலாக தங்கத்தில் விரல் செய்து பின்னர் திரிசூலநாதரின் அருகிலேயே சொர்ணாம்பிகையை இருக்கச் செய்திருக்கிறார்கள்.

See this map in the original post