சதுர்புஜ கோதண்டராமர் கோவில்
மகாவிஷ்ணு கோலத்தில் காட்சி தரும் ராமபிரான்
செங்கல்பட்டிலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள பொன்பதர் கூடம் என்ற கிராமத்தில் அமைந்திருக்கிறது சதுர்புஜ கோதண்டராமர் கோவில்.
ராமபிரான், தன் தாய் கோசலை, பக்தன் ஆஞ்சநேயர், சீதையிடம் பரிவு காட்டிய திரிசடை, ராவணன் மனைவி மண்டோதரி ஆகியோருக்கு நான்கு கரங்களுடன், சங்கு, சக்கரம் ஏந்தியவராக, மகாவிஷ்ணு வடிவாய்க் காட்சி தந்தார். அதேபோல தனக்கும் மகாவிஷ்ணு காட்சி தர வேண்டமென தேவராஜ மகரிஷி பெருமானை வேண்டித் தவமிருந்தார். அதன்படி வழக்கமாக ஒரு கரத்தில் வில்லும் ஒரு கரத்தில் அம்புமாக காட்சி தரும் ராமர், இங்கு சதுர்புஜ ராமராக சங்கு, சக்கரம், கோதண்டம் மற்றும் பாணம் இவைகளை தரித்துக்கொண்டு காட்சி தந்தார்.
ராமபிரானின் மார்பில் மகாலட்சுமி
கருவறையில் ராமபிரான், வலது புறம் சீதையுடன் ஒரே பீடத்தில் அமர்ந்து, மணக்கோலத்தில் காட்சி தருகிறார். இடப்புறம் லட்சுமணர் நின்றிருக்க, எதிரே இம்மூவரையும் வணங்கியபடி, வலக்கரத்தை வாயில் வைத்துப் பொத்தியபடி, அனுமன் இருக்கிறார். ராமபிரான் இங்கே விஷ்ணுவாகக் காட்சி தந்த தலம் என்பதால், இவர் மார்பில் மகாலட்சுமி இருப்பது விசேஷம்.
அழகு ததும்பும் உத்ஸவ மூர்த்தி
சதுர்புஜ கோதண்டராமரின் உத்ஸவ மூர்த்தி, அதி அற்புத அழகுடன் திகழ்கிறார். உத்ஸவ மூர்த்தியின் விரல் நகம், கை ரேகைகள், கணுக்கால், முட்டி, உருண்டு திரண்ட கால் சதை, தோள்கள் என ஒவ்வொரு அங்கமும் தத்ரூபமாக உன்ன ராமனின் சுந்தர வடிவம் , தரிசிப்போரை பரவசமடையச் செய்யும். சீதையை மணந்து கொள்ளும்முன் ராமர், இடதுகாற் பெருவிரலால் வில்லின் ஒரு பகுதியை மிதித்தபடி ஒடித்தார். அதை உணர்த்தும் விதமாக, இங்கு ராமர், இடது திருவடியை முன்புறமாக மடித்து வைத்த நிலையில் காட்சியளிக்கிறார்.
இல்லறம் சிறக்க வழிபட வேண்டிய தலம்
தம்பதியர் ஒற்றுமை வேண்டியும், பிரிந்த தம்பதியர் சேரவும் இங்கே வேண்டிக் கொள்கின்றனர். மகான் தர்மதிஷ்டருக்கு ஒரு சாபத்தால் ஏற்பட்ட தோல் நோய் குணமாக இங்கே ராமனை வழிபட்டார். ராமனருளால் அவர் நோய் நீங்கியது. எனவே, தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கே சுவாமிக்குத் துளசி மாலை அணிவித்து, கல்கண்டு படைத்து நோய் குணமடைய வேண்டிக் கொள்கிறார்கள்.
பொன்பதர் கூடம் என்ற பெயர் ஏற்பட்ட கதை
ஒருசமயம், வைணவ ஆசார்ய புருஷர்களில் ஒருவரான சுவாமி தேசிகர் இப்பகுதிக்கு யாத்திரையாக வந்த தருணத்தில், ஒரு கடலை வியாபாரி வீட்டின் திண்ணையில், தான் பூஜைக்காக உடன் கொண்டு வந்திருந்த ஹயக்ரீவர் விக்கிரகத்துடன் தங்கினார். அன்றிரவு தன் நிலத்தை ஒரு குதிரை மேய்வதாக கடலை வியாபாரி கனவு கண்டார்.
மறுநாள் திண்ணையில் குதிரை முகம் மனித உடலுடன் கூடிய ஹயக்ரீவ விக்கிரகத்துடன் அமர்ந்திருந்த தேசிகரிடம் தன் கனவை வியாபாரி சொன்னார். அவருக்கு ஹயக்ரீவர் அருள் பரிபூர்ணமாக கிடைத்துவிட்டதாக கூறினார் தேசிகர்.
பிறகு வியாபாரி தன் நிலத்திற்கு போய் பார்த்தபோது குதிரை மேய்ந்ததாக கனவில் கண்ட தன் நிலத்தில் நெற்கதிர்கள் பொன்மணிகளாக விளைந்திருப்பதைக் கண்டு பிரமித்தார். அதிலிருந்து இத்தலம் 'பொன் உதிர்ந்த களத்தூர்' என்று அழைக்கப்பட்டு நாளடைவில் 'பொன்விளைந்த களத்தூர்' என்று மாறியது. இந்த பொன் நெல்மணிகளைத் தூற்றியபோது இவற்றின் பொன் பதர்கள் சுமார் 2 கி.மீ. தொலைவிலுள்ள இடத்தில் போய் விழுந்ததாம். அப்படி பதர் விழுந்த இடமே ‘பொன்பதர் கூடம்' என்றாகியது. இங்குதான் சதுர்புஜ ராமர் கோவில் உள்ளது.