திருநாரையூர் (நாச்சியார் கோவில்) ஆகாச மாரியம்மன் கோவில்
சமயபுரம் மாரியம்மன் அருவமாக எழுந்தருளி இருக்கும் தலம்
கண்ணாடி வளையல்கள், மல்லிகை, முல்லை பூக்களை ஏற்றுக் கொள்வதற்காக ஆகாய மார்க்கமாக வரும் சமயபுரம் மாரியம்மன்
தர்ப்பை புல்லாலான ஆகாச மாரியம்மன்
கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருநாரையூர் ஆகாச மாரியம்மன் கோவில். ஆனால் இந்தக் கோவிலில் ஆகாச மாரியம்மனுக்கு திருவுருவத் திருமேனி கிடையாது. சமயபுரம் மாரியம்மனே இந்த கோவிலில் அருவமாக இருந்த ஆட்சி செய்கிறாள். இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், வைகாசி மாதம் அமாவாசையை அடுத்த வெள்ளிக்கிழமை தொடங்கி, பதிமூன்று நாட்களுக்கு திருவிழா மிகச்சிறப்பாக விழா நடைபெறுகிறது. அப்போது சமயபுரம் மாரியம்மன் ஆகாய மார்க்கமாக இங்கு வந்து, திருவிழாவுக்கு என்று செய்யப்படும் விக்கிரகத்தில் சேர்ந்து தரிசனம் கொடுப்பதாக ஐதீகம். இந்த ஊர் மக்கள் அளிக்கும் கண்ணாடி வளையல்கள், மல்லிகை, முல்லை பூக்களை ஏற்றுக் கொள்வதற்காகவே சமயபுரத்தாள் ஆகாய மார்க்கமாக இந்த ஊருக்கு வந்து திருவிழாவில் கலந்து கொள்கின்றாள். இதன் பின்னணியில் சமயபுரம் மாரியம்மனின் திருவிளையாடல் உள்ளது.
திருநாரையூரில், 600 ஆண்டுகளுக்கு முன்பு, கவரைச் செட்டியார்கள் என்ற வணிக சமூகத்தார், பாரம்பரியமாக கண்ணாடி வளையல் வியாபாரம் செய்து வந்தனர். ஊர் ஊராக சென்று வியாபாரம் செய்து வரும் பழக்கத்தை உடைய அவர்கள், ஒருமுறை சமயபுரம் கோவிலுக்கு வந்து இரவு தங்கினர். அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது, சமயபுரம் மாரியம்மன் இளம்பெண் வடிவம் எடுத்து வியாபாரி ஒருவரின் கனவில் தோன்றினாள். வியாபாரி அவள் கைகளுக்கு கண்ணாடி வளையல்களை அடுக்க ஆரம்பித்தார். ஆனால் வளையல்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக உடைந்தது. வியாபாரி குழப்பமடைந்து, இளம்பெண்ணின் கைகளை அலங்கரிக்க முடியவில்லை என்று வருத்தப்பட்டார்.
வியாபாரி , 'தாயே, வளையல்கள் அனைத்தும் உடைந்து விடுகிறதே. உனக்குத் தகுந்த வளையல்கள் போட வேண்டும் என்றால் தயவுசெய்து நீ எங்கள் ஊருக்கு வா. இரண்டு கைகள் நிறைய வளையல்களைப் போட்டு விடுகிறேன். உனக்கு முல்லை, மல்லிகை மலர்களைச் சூட்டுகிறேன். எங்கள் ஊருக்கு வா தாயே!' என்று அன்புடன் வேண்டினார்.
அதற்கு அந்த இளம்பெண், 'உங்கள் ஊருக்கு வந்தால்தான் வளையல் போடுவாயா? இப்போதே உங்கள் ஊர்காரர்களிடம் எழுந்தருள்கிறேன்' என்று சொல்லிவிட்டு மறைந்தாள். வியாபாரி கனவு கலைந்து எழுந்தார். அருகில் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த வளையல்கள் அனைத்தும் உடைந்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். தவிர, அவருடன் வந்திருந்த மற்ற வியாபாரிகளுக்கு அம்மை போட்டிருப்பதையும் கண்டார். இது சமயபுரத்தாளின் சோதனை என்பதை அறிந்த அவர், 'எங்களை மன்னித்துவிடு தாயே' என்று கோவிலை நோக்கிக் கைகூப்பினார்.
விடிந்ததும் காலையில் கோவில் குருக்கள் அந்த வியாபாரியிடம்,’ஐயா, வெளியூரிலிருந்து வந்திருக்கும் வளையல் வியாபாரி தாங்கள் தானே? இந்தாருங்கள் பொற்காசு. உடைந்த வளையல்களுக்கு உரிய தொகை. இதை உங்களிடம் சமயபுரத்தாள் கொடுக்கச் சொன்னாள்' என்றார். மேலும், அம்மை கண்டவர்களுக்கு மாரியம்மன் பிரசாதமாக குங்குமத்தை நெற்றியில் பூசினார் குருக்கள். அம்மை கண்டவர்கள் உடனே குணமடைந்து எழுந்தார்கள்.
கனவில் வளையல் போட்டுக் கொள்ள வந்தவள் சமயபுரம் அன்னையே என்பதை உணர்ந்து கொண்ட அவர், மற்றவர்களிடம் கூறவே, அவர்கள் அனைவரும் தங்களுக்கும் அன்னை காட்சி தரவேண்டும் என்று வேண்டினார்கள். அதை ஏற்று அன்னை ஆகாயத்தில் அன்ன வாகனத்தில் காட்சி தந்து அருளாசி வழங்கினாள். அன்னையை தரிசித்த வியாபாரிகள், 'தாயே, எங்கள் ஊருக்கு வந்து அருள வேண்டும்' என்று மனமுருக வேண்டினார்கள்.
சமயபுரம் மாரியம்மன் அவர்களிடம், 'உங்கள் ஊர் எது?' என்று கேட்க, 'நளிர்வாய் முல்லை முறுவலிக்கும் திருநாரையூர்" என்றனர். அவர்களது பக்தியை மெச்சிய அன்னை, ""முல்லைக்கும் மல்லிக்கும், முன்கை வளையல்களுக்கும் ஆண்டுதோறும் வைகாசி மாத அமாவாசைக்கு அடுத்த வெள்ளிக்கிழமை சமயபுரத்திலிருந்து ஆகாச மார்க்கமாக திருநாரையூருக்கு வந்து, பத்து நாட்கள் தங்கிவிட்டு மீண்டும் சமயபுரம் திரும்பி விடுவேன்' என்று அருளினாள்.
சமயபுரத்தாள் சொன்னதுபோல் ஒவ்வொரு வருடமும் திருநாரையூர் தலம் வந்து, பத்து நாட்களுக்குத் தங்கி அலங்காரத்துடன் காட்சி தந்து அருள்புரிகிறாள் என்பது ஐதீகம். இந்த விழா தற்பொழுது பத்து நாள்களுக்கு மேல் நடந்து பதிமூன்றாம் நாள் நின்ற கோலத்தில் தேரில் சமயபுரத்திற்கு எழுந்தருள்வதுடன் விழா நிறைவு பெறுகிறது. அச்சமயம் அம்மன் கையில் வெள்ளிக்குடம் கொடுத்து வீதியுலா நடைபெறும். இதன்மூலம், அம்மன் சமயபுரம் செல்கிறாள் என்பது ஐதீகம்.
இக்கோவிலில், ஆண்டுக்கு 10 நாட்கள் தவிர, அம்மன் உருவமற்றவராக அதாவது சூட்சும ரூபத்தில் இருக்கிறார். விளக்கு மட்டுமே அம்மன் என்று வழிபடப்படுகிறது. வைகாசி அமாவாசைக்குப் பிறகு, உள்ளூர் மக்கள் தர்ப்பை புல்லைப் பயன்படுத்தி அம்மன் சிலையை உருவாக்கி, மல்லிகைப் பூக்கள் மற்றும் கண்ணாடி வளையல்களால் அலங்கரிக்கின்றனர். உடையக்கூடிய தர்ப்பை புல்லால் மூர்த்தி கட்டப்படும் கோவிலை நாம் வேறு எங்கும் காண முடியாது.
ஒவ்வொரு நாளும் புதிதாக தர்ப்பை புல் சேர்க்கப்படும், இதனால் வடிவம் படிப்படியாக வளரும். மற்றும் அலங்காரங்களும் தினமும் மாற்றப்படும். லட்சுமி, சரஸ்வதி, மதனகோபாலன் போன்ற பல்வேறு வடிவங்களில் அவள் சித்தரிக்கப்படுகிறாள், கடைசி நாளில் ராஜ ராஜேஸ்வரி வடிவத்தில் உச்சம் பெறுகிறாள்.