௳ (முகப்பு)

View Original

சின்னசெவலை காளி கோவில்

கம்பர் வழிபட்ட காளி கோவில்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் என்ற தேவார தலத்திலிருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சின்னசெவலை என்ற கிராமம். இக்கிராமத்தில் இருந்து தென்பெண்ணை ஆற்றுக்கு தெற்கே 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது காளி கோவில். இக்கோவில் திருவெண்ணெய்நல்லூர், சின்னசெவலை கிராம எல்லையில் வயல்களின் நடுவில் அமைந்துள்ளது.

அன்னை காளி நான்கரை அடி உயரம் கொண்டு, நின்ற கோலத்தில் எட்டு கரங்களோடு பலகைக் கல்லில் உருவான புடைப்பு சிற்பமாக காட்சி தருகிறாள். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த காளிதேவியை சுற்றி விநாயகர், முருகன் சந்நிதிகள், இரு நாகப்புற்றுகள் அமைந்துள்ளன. பொதுவாக காளி, துர்க்கை ஆகிய தெய்வங்கள் வடக்கு நோக்கி காட்சி தருவதே வழக்கம். ஆனால், இத்தலத்து காளி கிழக்கு முகமாய் திருவெண்ணெய்நல்லூர் தலத்தை நோக்கியபடி காட்சி தருகிறாள்.

கம்பர் பிறந்த ஊர் சோழநாட்டின் திருவழுந்தூர் என்றாலும், சோழ மன்னர் ஆதரிக்காத நிலையில் நடுநாடு வந்த கம்பரை ஆதரித்து அரவணைத்தவர்.

திருவெண்ணைநல்லூர் கிராமத்தை சேர்ந்த சடையப்ப வள்ளல். சடையப்ப வள்ளல் தினமும் அதிகாலையில் எழுந்து தனது வயல்வெளிகளைச் சுற்றிப் பார்ப்பது வழக்கம். அப்போது வயல்வெளிகளுக்கு நடுவில் அமைந்துள்ள காளிகாம்பாளை வழிபடுவார். ஒரு நாள் சடையப்ப வள்ளலும், கம்பரும் இந்த காளியை வழிபட்டுக் கொண்டிருந்தபோது, வால்மீகியால் எழுதப்பட்ட ராமரின் கதையை தமிழில் எழுதும்படி கம்பரை, சடையப்ப வள்ளல் கேட்டுள்ளார். அப்போது 'ஸ்ரீமத் நாராயணனுடைய அவதாரமாகிய ராமபிரானின் சரித்திரத்தை, அவரது தங்கையான இந்த காளியினுடைய ஆலயத்தில் இப்போதே பூஜை போட்டு தொடங்கி வையுங்கள்' என்று சடையப்ப வள்ளலைக் கம்பர் கேட்டாராம். இதனைத் தொடர்ந்து சடையப்ப வள்ளல் முன்னாலேயே ராமாயண காப்பியத்தை எழுத ஆரம்பித்துள்ளார் கம்பர் என்று புராணங்களில் கூறப்படுகிறது. கம்பரின் எழுத்தாற்றலுக்கு பேருதவி புரிந்த தெய்வமாகவும், விருப்பமான வழிபாட்டு தெய்வமாக விளங்கியவள் அன்னை காளி. இவள் அளித்த ஞானத்தாலேயே கம்பரும் ராமாயணத்தை இயற்றினார்.

கம்பர் வழிபட்ட காளி கோவில் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் இத்தலத்துக்கு வந்து செல்கின்றனர். இக்கோவில் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

படங்கள் உதவி : திரு. வெற்றிவேல், ஆலய அர்ச்சகர்

See this map in the original post