௳ (முகப்பு)

View Original

வடசேரி கிருஷ்ணன் கோவில்

சந்தான வரம் அருளும் பாலகிருஷ்ணன்

நாகர்கோவில் நகரத்தின் வடசேரி பகுதியில் அமைந்துள்ளது கிருஷ்ணன் கோவில். இத்தலம் தென் திசையின் குருவாயூர் என்று அழைக்கப்படுகிறது. குருவாயூர் கிருஷ்ணனைப் போலவே, இத்தலத்து மூலவர் பாலகிருஷ்ணன் குழந்தை வடிவில், தன் இரு திருக்கரங்களிலும் வெண்ணெய் வைத்துக் கொண்டு, இரண்டு கால்களையும் சற்றே மடக்கி நின்றபடி காட்சி அளிக்கிறார். மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்தபோது அவரது குழந்தை பருவத்தில் கிருஷ்ணர் என்றும், பசுக்களை மேய்க்கும் இளைஞனாக இருந்தபோது ராஜகோபாலர் என்றும் அழைக்கப்பெற்றார். இதன் அடிப்படையில் இங்கு மூலவராக கிருஷ்ணரையும், உற்சவராக ராஜகோபாலரையும் வடித்துள்ளனர். உற்சவர் ராஜகோபாலர் ருக்மணி மற்றும் சத்யபாமாவுடன் காட்சி தருகிறார்.

இந்த குழந்தை பாலகிருஷ்ணன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வரங்களை வாரி வாரி வழங்குகிறார். தினந்தோறும் பாலகிருஷ்ண சாமியின் முகத்தில் சந்தனம் அல்லது வெண்ணெயால் அலங்காரம் செய்யப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியன்று நள்ளிரவில் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கும். அப்போது சுவாமி விசேஷ அலங்காரத்தில் தத்ரூபமாக, குழந்தை போலவே காட்சியளிப்பார்.

தல வரலாறு

கி.பி. 13-ம் நூற்றாண்டில் இந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த ஆதித்தவர்ம மகாராஜா, குருவாயூர் கிருஷ்ணனின் சிறந்த பக்தர். ஒருமுறை கிருஷ்ணர் இவரது கனவில் கையில் வெண்ணெயுடன் குழந்தைக் கண்ணனாக காட்சி தந்தார். அது மட்டுமன்றி தனக்கு கோயில் அமைய இருக்கும் இடத்தையும் குருவாயூரப்பனே கூறியுள்ளார். நாளை காலை சூரிய உதயத்தின் போது அருகே இருக்கும் கானகத்திற்கு செல். அடர்ந்த மரச்சோலைக்குள் சிறிய குளம் ஒன்றின் அருகே கருடன் இருப்பான்.அவ்விடமே எனக்கு கோவில் அமைய ஏற்ற இடம் என்று கூறியுள்ளார். அதன்படி மறுநாள் காலை அவ்விடம் வந்த ஆதித்தவர்ம மகாராஜா கருடனை கண்ட இடத்திலேயே கோவில் எழுப்பினார். அதுதான் இப்பொழுது கோவில் அமைந்திருக்கும் இடம். தான் கனவில் கண்ட வடிவத்திலான கிருஷ்ணர் சிலையை பிரதிஷ்டை செய்தார். சுவாமிக்கு நவநீத கிருஷ்ணர் (நவநீதம் என்றால் வெண்ணெய்) என திருநாமம் சூட்டினார்.

குழந்தை கிருஷ்ணருக்கு வெள்ளி தொட்டிலில் தாலாட்டு

ஒவ்வொரு நாள் இரவும் பாலகிருஷ்ணன் சாமி நித்திரைக்கு செல்லும் முன் ஊஞ்சல் சேவையுடனும், பாராயணத்துடனும் செல்வதை காண கண்கோடி வேண்டும். இக்காட்சியை கண்டு நெய்வேத்திய பிரசாதம் அருந்தி வருபவர்களுக்கு சந்தான வரம் கிடைக்கும் என்பதும் இத்தலச் சிறப்பாகும்.

தினமும் அர்த்தஜாம பூஜையின்போது, குழந்தை கிருஷ்ணரை வெள்ளி தொட்டிலில் கிடத்தி, தாலாட்டு பாடி பூஜிக்கின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு கிருஷ்ணருக்கு வெண்ணெய் காப்பு சாத்தி, பால் பாயாசம், உன்னியப்பம், பால், பழம், அரிசிப்பொரி, வெண்ணெய், அவல், சர்க்கரை படைக்கின்றனர். தொடர்ந்து மூன்று அஷ்டமி நாட்கள் அல்லது ரோகிணி நட்சத்திர நாட்களில் இக்கோவிலுக்கு வந்து பால கிருஷ்ணனை வழிபட்டு வெண்ணையும், பாலும் வாங்கி உண்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இரு கைகளில் வெண்ணையுடன் பாலகிருஷ்ணன்

உற்சவர் ராஜகோபாலர், ருக்மணி மற்றும் சத்யபாமா

See this map in the original post