௳ (முகப்பு)

View Original

சுப்பிரமணிய சுவாமி கோவில்

பச்சைமலை முருகனின் பரவசப் புன்னகை

ஈரோடு மாவட்டம், கோபிச் செட்டிப்பாளையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் இருக்கிறது பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்.

பச்சைமலை மூலவர் பால தண்டயுதபாணியாகக் காட்சி தருகிறார். பச்சைமலை மூலவரின் புன்னகை நம்மை பரவசப்படுத்தும் சிறப்பு உடையது. பழனியை போன்றே இங்கு மூலவர் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். மேற்கு நோக்கிய முருகன் திருத்தலங்கள் மிகவும் அரிது.

பச்சைமலை முருகன் கோவில் வரலாறு

முன்னொரு காலத்தில் துர்வாச முனிவர் ஒருமுறை கொங்கு நாட்டிற்கு எழுந்தருளினார். குன்னத்தூர் அருகே வந்து, சிவ பூஜை செய்ய சரியான இடத்தை தேட முற்பட்டார். அப்போது, கோபி அருகே அமைந்துள்ள மொடச்சூர் என்னும் ஊர் தான் சிவ பூஜை செய்ய சரியான இடம் என்பதை ஞான திரிஷ்டியால் உணர்ந்து அங்கு வந்து சிவ பூஜை செய்ய முற்படுகிறார். அப்போது குறை தீர்க்கும் குமரக் கடவுளை காண எண்ணி அவரது மனம் பூஜையில் திளைக்க மறுக்கிறது. குறை தீர்க்கும் குகனை எண்ணி தவத்தால் அருகில் உள்ள பச்சைமலை ( மரகதாச்சலம்/ மரகதகிரி) என்னும் குன்றை அறிகிறார். அங்கு அவருக்கு பாலதண்டாயுதபானியாக முருகன் காட்சி அளிக்கிறார். அவரின் வேண்டுகோளை ஏற்று இறைவன் பச்சைமலையில் நிலையாகக் குடிகொள்கின்றான். துர்வாசர் முருகனை மேற்கு நோக்கி பிரதிஷ்டை செய்கிறார்.

கால ஓட்டத்தில், மரகதாச்சலத்தின் மகிமையை உலகம் மறந்தது. கோவில் மிகவும் பாழடைந்தது. அப்போது குப்புசாமி கவுண்டர் என்ற பக்தர் இறைவனை தரிசிக்க வருகிறார். அவருக்கு ஜோதி வடிவாக அருளிய முருகன், தன் கோவிலை பராமரிக்குமாறு அவருக்கு அசரீரியாக ஆணை பிறப்பிக்கிறார். இறைவனின் ஆணை ஏற்று பூஜைகள் தொடங்கப்பட்டது. பக்தர்களால் இணைந்து திருப்பணிகள் பல செய்யப்பட்டது. இன்று மீண்டும் மரகதாச்சலபதியாகிய பச்சைமலை பாலமுருகன், தமிழகமெங்கும் உள்ள முருக பக்தர்களால் கொண்டாடப்படுகிறான்.

தாரா அபிஷேகம்

இத்தல மூலவருக்கு தாரா அபிஷேகம் செய்வது பிரசித்தமான வழிபாடுகளில் ஒன்று. 108 லிட்டர் பால் கொண்டு 11 முறை ருத்ரம் ஓதி செய்யப்படும் இந்த வழிபாட்டால் நீண்ட ஆயுள், நோயற்ற வாழ்வு கிடைக்கிறது.

இத்தல முருகனை வணங்கினால் திருமணம் கைக்கூடும்.அதே போல குழந்தை பேறு வேண்டி நிற்கும் தம்பதிகள் கந்தசஷ்டி விரதமிருந்து வழிபட, குழந்தை பாக்கியம் அருள்கிறான் குமரன். இந்த விரதத்திற்காக வருடத்திற்கு சுமார் 5000 பேர் இத்தலத்தில் காப்புக் கட்டிக் கொண்டு விரதமிருக்கிறார்கள்.

பங்குனி உத்திரத்தன்று மும்மூர்த்தியாகத் திகழும் முருகன்

பங்குனி உத்திர கல்யாண உற்சவத்தின் போது சிவப்பு சாத்தி உற்சவம் நடைபெறுகிறது. அன்று ஷண்முகர் திருசெந்தூரை போலவே நடராஜராகவும் காட்சி அளிப்பார். அன்றைய தினம் இரவு வெள்ளை சாத்தி உற்சவமும், மறுநாள் பங்குனி உத்திரத்தன்று பச்சை சாத்தி உற்சவமும் நடைபெறும். முருகன் தானே சிவன், பிரம்மா , விஷ்ணுவாகத் திகழ்வதை உணர்த்தவே இவ்வலங்காரங்கள் செய்யப்படுகின்றது.

See this map in the original post