சிதம்பரம் வெள்ளந்தாங்கி அம்மன் கோவில்
யானையின் துதிக்கையில் அரவணைத்து இருக்கும் வெள்ளந்தாங்கி அம்மன்
சிதம்பரம் நடராசர் கோயிலைச் சுற்றி நான்கு திசைகளிலும் அமைந்துள்ள நான்கு காவல் தெய்வங்கள் எழுந்தருளி இருக்கிறார்கள். அவர்களில் தெற்கு திசையில் அமைந்துள்ள காவல் தெய்வம் வெள்ளந்தாங்கி அம்மன் ஆவார். சிதம்பரம் சபாநாயகர் தெருவில் இக் கோவில் அமைந்துள்ளது. இது ஒரு சிறிய கோயிலாகும். கருவறையில் வெள்ளந்தாங்கி அம்மன் மேற்கு நோக்கி உள்ளார். யானையின் துதிக்கையில் அரவணைத்து இருப்பதுபோல் அம்மனின் உருவம் உள்ளது. கருறையில் அம்மனின் வலப்பக்கம் சிவலிங்கமும், இடப்பக்கம் சபரி சாஸ்தாவும் உள்ளனர்.
அம்மனுக்கு வெள்ளந்தாங்கி அம்மன் என்ற பெயர் வந்த கதை
சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெய்த ஒரு பெருமழையில் சிதம்பரம் நகரம் பெரும் வெள்ளக்காடாக ஆனது. அப்போது ஒரு பெண் வெள்ளத்தில் நீந்தி வந்தாள். அவளை நோக்கியபடி யானை ஒன்று பிளிறியபடி சென்றது. அது அப்பெண்ணை தன் துதிக்கையால் தூக்கிச் சென்று தில்லை நடராசர் கோயிலின் தெற்குப் பகுதியில் விட்டுச் சென்றது. ஊர் மக்கள் அங்கு சென்று பார்த்தபோது அப்பெண் அங்கு இல்லை. ஆனால் யானையின் துதிக்கையில் ஒரு பெண் இருப்பது போன்ற சிலை ஒன்று இருந்தது. வெள்ளம் வடிந்த பிறகு ஊர் மக்கள் தில்லை அந்தணர்களிடம் நடந்த விசயத்தைக் கூறினர். அவர்களின் ஆலோசனையின்படி அச் சிலையை அங்கேயே பிரதிட்டை செய்து வெள்ளந்தாங்கி அம்மன் என்ற பெயரைச் சூட்டி வழிபடத் தொடங்கினர்.
இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களைக் காத்த வெள்ளந்தாங்கி அம்மனை, விவசாயம் செய்யும் அனைவருமே பயபக்தியோடு வந்து தாங்கள் விதைக்கப் போகும் விதையை இங்கு வைத்து பூஜை செய்துவிட்டு பிறகுதான் அதை விதைக்கிறார்கள். அப்படிச் செய்வதால் இயற்கைப் பேரிடர்களில் இருந்து விவசாயத்தையும், தங்களையும் அம்மன் அரவணைத்து காப்பாற்றுவாள் என்று நம்புகிறார்கள்.