கீழ்வேளூர் கேடிலியப்பர் கோவில்
சகல பாவங்கள், தோஷங்கள் நீங்க அருள் புரியும் அம்பிகை
நாகப்பட்டிணம்-திருவாரூர் சாலையில் 12 கீ.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் கீழ்வேளூர். இறைவன் திருநாமம் கேடிலியப்பர். இறைவியின் திருநாமம் சுந்தர குஜாம்பிகை. இக்கோவிலின் தல மரம் இலந்தை. முற்காலத்தில் இந்த இடமே இலந்தை மரக் காடாக இருந்திருக்கின்றது. அதனால் இத்தலத்திற்கு தட்சிண பத்ரி ஆரண்யம் என்ற பெயர் ஏற்பட்டது.
பார்வதிதேவி, கைலாயத்தில் தினமும் ஆறுகால சிவபூஜை செய்வது வழக்கம். ஒரு சமயம் பார்வதி தேவி தனது பூஜையை முடித்துவிட்டு, இலந்தை மரக் காடாக இருந்த இத்தலத்துக்கு வந்தபோது பாம்பும் கீரியும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளாமல், விளையாடிக் கொண்டிருந்த அதிசயக் காட்சியை கண்டாள். மேலும் அங்கு சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி இருந்த கேடிலியப்பரை தரிசித்தாள். தனது அடுத்த கால சிவபூஜைக்கு நேரமாகி விட்டதால், அந்த இலந்தை( பத்ரி) மரக்காட்டில் இருந்த கேடிலியப்பருக்கு பூஜை செய்து முடித்தாள். இதனால் இத்தலத்து அம்பிகைக்கு, பதரி வனமுலை நாயகி என்ற பெயரும் உண்டு. . கருவறையில் அம்பிகை தன் மேலிரு கரங்களில் அட்சமாலை, தாமரை மலர் தாங்கியும், இடது கையைத் தொடையில் வைத்து வலது கையைத் தூக்கி, அபயம் அளிக்கும் கோலத்தில் அழகு மிளிர காட்சி அளிக்கிறாள்.
இறைவன், இறைவி ஆகியோரின் திருப்பெயர்கள், கோவில் ஆகியவை தேவாரப் பாடலில் போற்றப்பட்ட சிறப்பு
வனமுலைநாயகி என்று இறைவியின் பெயரை திருஞானசம்பந்தர் தனது மின் உலாவிய சடையினர் என்று தொடங்கும் இவ்வூர்ப் பதிகம் இரண்டாம் திருப்பாட்டில் "வாருலாவிய வனமுலையவளொடு மணி சிலம்பு அவை ஆர்க்க" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இத்திருக்கோயிலைப் பெருந்திருக்கோயில் என்று இவ்வூர்ப் பதிகத்தில் பல பாடல்களில் ஞானசம்பந்தர் கூறியுள்ளார். எனவே இத்தலத்தின் இறைவன், இறைவி ஆகியோரின் திருப்பெயர்கள், கோவில் இவைகள் எல்லாம் தேவாரத்தில் போற்றப்பட்ட சிறப்புடையனவாகும்.
பிரார்த்தனை
வேண்டுவோருக்கு இல்லையெனாது அனைத்தையும் அள்ளி வழங்கும் கருணை உடையவள் சுந்தர குஜாம்பிகை. பக்தர்கள், சகல பாவங்கள், தோஷங்கள் நீங்க இந்த அம்பிகையிடம் வேண்டிக் கொள்கிறார்கள்
சித்ரா பவுர்ணமியில் பிரமோத்சவம் நடைபெறுகிறது. ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், நவராத்திரி, தீபாவளி, வருடப்பிறப்பு, பொங்கல், மாசிமகம், பங்குனி உத்திரம் ஆகிய விசேஷ நாட்களில் அம்பிகைக்கு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு
1. முருகனின் சிவபூஜைக்கு இடையூறு வராமல் காத்த அஞ்சுவட்டத்தம்மன் (18.06.2024)
https://www.alayathuligal.com/blog/c3jcgr7rabll9kh6wd2bajnncyrzn8?rq
2. தேவாதி தேவர்கள் இன்னிசைக்க நடராஜர் வலது காலைத் தூக்கி ஆடும் அபூர்வக் காட்சி (02.07.2022)
https://www.alayathuligal.com/blog/s5d75w38pyfw8hlatjtgef8t3p9fnm?rq