ராமேசுவரம் கோதண்டராமர் கோவில்
ராமர், சீதை, லட்சுமணனுடன் விபீஷணர் இருக்கும் அபூர்வ காட்சி
ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 12 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது கோதண்டராமர் கோவில். கருவறையில் ராமர், சீதை மற்றும் லட்சுமணர் காட்சி தருகின்றனர். ராமர் கையில் கோதண்டத்துடன் (வில்) இருப்பதால், 'கோதண்டராமர்' என்றும், தலம் 'கோதண்டம்' என்றும் அழைக்கப்படுகிறது. அருகில் பரிந்துரைந்த ஆஞ்சநேயர் இருக்கிறார். இலங்கையிலிருந்து சீதையை மீட்டு திரும்பிய ராமர், உடன் வந்த விபீஷணருக்கு இலங்கையின் அரசனாக பட்டாபிஷேகம் செய்த புனித தலமாக இப்பகுதி கருதப்படுகிறது. இராமரை ஆஞ்சநேயர் வணங்கும் காட்சியை எல்லாக் கோவில்களிலும் காண முடியும். ஆனால், இங்கு ராமரின் அருகில் விபீஷணன் வணங்கியபடி காட்சியளிக்கிறார். இது ஒரு அபூர்வமான காட்சியாகும்.
விபீஷணன் தன் சகோதரன் இராவணனிடம், சீதையைக் கவர்ந்து வந்தது தவறு என்றும், சீதையை இராமரிடமே ஒப்படைக்கும்படியும் புத்திமதி கூறினார். இராவணன் அதை ஏற்க மறுக்கவே, விபீஷணன் இராமருக்கு உதவி செய்வதற்காக ராமேசுவரத்தில் இராமபிரானிடம் அடைக்கலம் பெற்றார் என்பது ஐதீகம்.
ராமர் விபீஷணனுக்கு இலங்கை வேந்தனாக பட்டாபிஷேகம் செய்து வைத்த தலம்
விபீஷ்ணன் ராமபிரானைத் தேடி வந்தபோது, ராமருடன் இருந்த வானரப்படையினர். விபீஷணன் மீது சந்தேகம் கொண்டு அடைக்கலம் தரக்கூடாது என்றனர். ஆனால் ஆஞ்சநேயர் ராமனிடம், விபீஷணனின் நடவடிக்கைகளை தான் இலங்கையில் கவனித்து வந்ததாகவும், அவனது சிறப்பியல்புகளையும் எடுத்துக் கூறி அவனை ராமசேவைக்கு அனுமதிக்கும்படி பரிந்துரைத்தார். இதனால் ஆஞ்சநேயர், பரிந்துரைந்த ஆஞ்சநேயர் என பெயர் பெற்றார். இவரிடம் நமது நியாயமான கோரிக்கைகளை தெரிவித்தால், அதை ராமரிடம் பரிந்துரைத்து நிறைவேற்றி வைப்பார் என்பது நம்பிக்கை. விபீஷணர் பட்டாபிஷேகம் ஆனி மாத வளர்பிறை நவமியன்று நடக்கிறது.
பிரார்த்தனை
குறுக்கு வழியில் தலைமைப் பதவி அடைய நினைப்போரை ஒடுக்கி வைப்பவர் இந்த ராமர். தரம் கெட்ட ராவணனுக்குப் பதிலாக ஒழுக்கத்தைக் கடைபிடித்த விபீஷணரை இத்தலத்தில் பதவியில் அமர்த்தியதால், நியாயமான வழியில் தலைமைப்பதவி கிடைக்க இவரை வணங்கலாம். தீயவர் சேர்க்கையிலிருந்து விடுபடவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
கோதண்டராம சுவாமி கோவிலின் சுவர்கள், ராமாயணக் கதையைச் சித்தரிக்கும் அற்புதமான ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.