௳ (முகப்பு)

View Original

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

பங்குனி உத்திரத்தன்று இரண்டு தடவை திருக்கல்யாணம் நடைபெறும் அதிசயம்!

பங்குனி உத்திரத்தன்று நடைபெறும் தெய்வத் திருமணங்களை கண்டு வழிபட்டால், நமது திருமண வாழ்க்கை இனிமை நிறைந்ததாக மாறும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

பொதுவாக பங்குனி உத்திரம் தினத்தன்று ஒவ்வொரு கோவிலிலும் ஒரே ஒரு தடவைதான், அதுவும் உற்சவருக்குத்தான் திருக்கல்யாண உற்சவத்தை நடத்துவார்கள். ஆனால் திருவண்ணாமலை தலத்தில் மட்டும் பங்குனி உத்திரம் தினத்தன்று இரண்டு தடவை திருக்கல்யாணம் நடைபெறும். முதலில் மூலவரான அண்ணாமலையாருக்கு திருக்கல்யாணம் நடைபெறும். பிறகு உற்சவரான பெரிய நாயகருக்கு திருக்கல்யாணம் நடத்தப்படும். இது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மட்டுமே பின்பற்றப்படும் அதிசயமான நடைமுறையாகும். தமிழ்நாட்டில் எந்த ஒரு சிவாலயத்திலும் இப்படி திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுவதில்லை. குறிப்பாக மூலவருக்கு எந்த ஆலயத்திலும் திருக்கல்யாணம் நடத்த மாட்டார்கள்.

பொதுவாக எல்லா கோவில்களிலும் பங்குனி உத்திர திருமண விழா ஒரே நாளில் நடந்து முடிந்து விடும். ஆனால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மொத்தம் ஆறு நாட்கள் இந்த திருமண விழா நடைபெறும். நமது கலாச்சாரத்தில் கடைபிடிக்கப்படும் அனைத்து திருமண சடங்குகளும் செய்யப்படும். மாலை மாற்றுவது, நலங்கு வைப்பது, பூப்பந்து வீசி விளையாடுவது, மரு வீட்டுக்கு செல்வது, மீண்டும் தாய் வீட்டில் இருந்து வருவது, நலங்கு ஊஞ்சல் உற்சவம், பாலிகை விடுதல் என்று முழுமையான திருமண விழாவாக அந்த அண்ணாமலையார் கல்யாண உற்சவம் நடைபெறும்.