சந்திரமவுலீஸ்வரர் கோவில்
திருவக்கரை வக்ரகாளியம்மன்
தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றான திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் ஆலயத்தில் உள்ளது வக்ரகாளியம்மன் சந்நிதி.
பொதுவாக காளி கோவில், ஊரின் எல்லையில்தான் இருக்கும். ஆனால் இங்கு ஊரின் நடுவில் ராஜ கோபுரத்தின் நுழைவு வாயிலின் அருகிலேயே அமைந்து, வித்தியாசமானதாக உள்ளது.
வக்கிரகாளியின் திருவுருவம் பிரமிப்பாக இருக்கிறது. சுடர் விட்டு பரவும் தீக்கங்குகளைப் பின்னணியாகக் கொண்ட தலை, மண்டை ஓட்டுக் கிரீடம், வலது காதில் சிசுவின் பிரேத குண்டலம் அணிந்திருக்கிறாள்.
காளியம்மனின் வலப்புறம் உள்ள நான்கு திருக்கரங்களிலும் மேலிருந்து முறையே பாசம், சக்கரம், வாள் மற்றும் கட்டாரி ஆகியவற்றை ஏந்தி காட்சித் தருகின்றாள். அதேபோல இடப்புறத்தில் மேலிருந்து முறையே உடுக்கை வைத்திருக்கும் பாவனையுடன் ஒரு திருக்கரம், அடுத்து கேடயம் மற்றும் கபாலம் ஏந்தியிருக்கும் இரு திருக்கரங்கள் மற்றும் இறுதியாக இடதுகாலை ஒட்டிக் கை விரல்களை லாவகமாக மடக்கி ஆள்காட்டி விரலால் அம்மன் தனது இடது பாதத்தைச் சுட்டிக்காட்டும் பாவனையில் அமைந்த திருக்கரம் என நான்கு திருக்கரங்களுடன் அருள்புரிகின்றாள். அன்னையின் மார்பிற்கு குறுக்கே மண்டை ஓட்டு மாலை காணப்படுகிறது. தர்மத்திற்கு எதிராக அக்கிரமம் செய்பவர்களை அழித்து அவர்களது மண்டை ஓடுகளை சேர்த்து மாலையாக அணிந்துள்ளாள்.
வக்கிரகாளி தலையை சற்று இடதுபுறமாக சாய்த்தபடி அமர்ந்த திருக்கோலத்தில் அருள்புரிகின்றாள். கோரைப் பற்களுடன் சினம் கக்கும் பெரிய உருண்டை விழிகளால் பூமியை நோக்குகின்றாள். அம்மன் வலது காலைச் சற்றே தூக்கி மடித்து அமர்ந்துள்ள பீடத்தில் ஊன்றியபடியும், இடது காலை தரையில் ஊன்றியபடியும் உடலை சற்று வலப்புறம் திருப்பிய நிலையில் அமர்ந் துள்ள காட்சி வேறு எங்கும் காணக்கிடைக்காத கண் கொள்ளாக் காட்சி ஆகும்.
வக்ராசூரன் என்ற அசுரனை வரதராஜப் பெருமாள் சம்காரம் செய்கிறார். அந்த வக்ராசூரனின் தங்கை துன்முகியை, வக்ர காளி சம்காரம் செய்யும் போது அந்த ராட்சசி துன்முகி கர்ப்பமாக இருந்தாளாம். குழந்தையை வதம் கூடாது என்பது தர்ம சாஸ்திரம். எனவே துன்முகியின் வயிற்றில் கருவிலுள்ள குழந்தையை காளி தனது வலது காதில் குண்டலமாக அணிந்து கொண்டு ராட்சசியை சம்காரம் செய்தாளாம். வக்கிராசூரனின் தங்கையை அழித்ததால் வக்ரகாளியாக அங்கேயே அமர்ந்து விட்டாள்.
சம்காரம் பண்ணியதால் வக்ரகாளி ஓங்காரமாக இருந்திருக்கிறாள். ஆதி சங்கரர் வந்து காளியை சாந்தம் செய்து இடது பாதத்தில் ஸ்ரீ சக்ர ராஜ எந்திரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார்.
ராகு கேது கிரகங்களுக்கு அதிதேவதை காளி என்பதால் இக்கோவிலை வலம் வர நினைப்பவர்கள் வலப்பக்கமாக ஐந்து முறையும், இடப்பக்கமாக நான்கு முறையும் வலம் வந்து தொழ வேண்டும் என்பது ஐதீகம்.
பவுர்ணமி இரவு, அமாவாசை நண்பகல் ஜோதி தரிசனம்
பவுர்ணமி இரவு 12 மணிக்கும் அமாவாசை பகல் 12 மணிக்கும் வக்ரகாளியம்மனுக்கு ஜோதி தரிசனம் காட்டும் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் கூடுகிறார்கள். வக்ரகாளியம்மன் சன்னதியின் கோபுர மண்டபத்திற்கு மேல் சூடம் ஏற்றுவார்கள். அந்த தீபத்தை தரிசனம் காணுவது இத்தலத்தின் முக்கிய விசேஷம் ஆகும்.