௳ (முகப்பு)

View Original

அபிசேகபுரம் ஐராவதீசுவரர் கோவில்

சிவபெருமானையும், அம்பாளையும் ஒருசேர தரிசிக்கும் நிலையில் அமர்ந்திருக்கும் அபூர்வ நந்தி

திருப்பூரிலிருந்து நம்பியூர் செல்லும் வழியில் உள்ள அபிசேகபுரத்தில் அமைந்துள்ளது, 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த, ஐராவதீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் அபிஷேகவல்லி. இந்திரனின் வாகனமான வெள்ளை யானை வதத்திற்கு இறைவன் சாப விமோசனம் கொடுத்ததால் அவருக்கு ஐராவதீசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது. இக்கோவிலில் சிவபெருமானின் திருமண நிகழ்ச்சியை குறிப்பிடும் வகையில், ஐராவதீசுவரர், அபிஷேகவல்லி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகுராஜா பெருமாள் சன்னதிகள் இருக்கின்றன. ஒரே வளாகத்தில், ஈசுவரன் மற்றும் மற்றும் பெருமாள் கோவில்கள் அமைந்துள்ளதும், திருக்கல்யாண கோலத்தில் இருப்பதும் சிறப்பு.

இக்கோவில் மூலவரான ஆவுடையார், தரைமட்டத்தில் இருந்து பனை மரம் உயரம் இருந்ததாகவும், சுயம்புவாக இருந்ததாகவும் வரலாறு உள்ளது. ஆஜானுபாகுவான ஐராவதம், 48 நாட்கள் அருகிலிருந்த குளத்தில் நீராடி, தாமரை மலர் பறித்து வந்து பூஜித்துள்ளது. அளவிட முடியாத உயரம் இருந்த ஐராவதமே, தும்பிக்கையால் தொட முடியாத அளவுக்கு பிரமாண்டமாக இருந்த ஆவுடையாரை, சுற்றிலும் மண் நிரப்பி, பக்தர்கள் தரிசித்துள்ளனர். பிற்காலத்தில், கோவிலாக அமைக்கப்பட்டுள்ளது.

இறைவன் ஐராவதீசுவரர் முன் அமர்ந்துள்ள பிரதோஷ நந்தி அற்புதமான அழகுடன், மிகப்பெரியதாக காணப்படுகிறது. மற்ற கோவில்களில் உள்ளது போல், நேராக இல்லாமல், வித்தியாசமாக தலையை இடதுபுறமாக திருப்பி, வலது கண்ணால் சிவனை தரிசிப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளது, இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். சிவபெருமானையும், அம்மனையும் ஒருங்கே தரிசிக்கும் வகையில் நந்தி அமைந்துள்ளதாலும், பக்தர்களின் வேண்டுதலை கேட்கும் நிலையில் இருப்பதாலும் , இக்கோவில் பிரதோஷ கால பூஜை சிறப்பானதாகும். இங்கு வந்து 12 பிரதோஷ காலம் வழிபட்டு வந்தால், அனைத்து விதமான சாபங்கள், கஷ்டங்கள் நீங்கும் என்ற நம்பிக்கை பக்தர்கள் இடையே உள்ளது. அதேபோல், தொழில் தடை, திருமண தடை, புத்திர பாக்கிய தடை நீங்குவதாகவும் பக்தர்களிடையே நம்பிக்கை உள்ளது.

ஐராவதீசுவரர், அழகுராஜா பெருமாள் ஆகிய இரண்டு கோவில்களிலும் தனித்தனி தீபஸ்தம்பங்கள் உயரமாக அமைந்துள்ளன. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது; பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதாசி கொண்டாடப்படுகிறது.

See this map in the original post