௳ (முகப்பு)

View Original

கழுகுமலை வெட்டுவான் கோவில்

மிருதங்கம் வாசிக்கும் தட்சிணாமூர்த்தி

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் உள்ள வெட்டுவான் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. பாண்டியர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட, 1200 ஆண்டு பழமையான இக்கோவில், கோவில்பட்டியிலிருந்து 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

தென் தமிழகத்தின் எல்லோரா

பொதுவாக ஒரு கோயிலோ அல்லது வீடோ கட்டும் போது அஸ்திவாரம் போட்டு கீழிருந்து மேலாக கட்டுவார்கள், ஆனால் இந்த குடை வரை கோயில் மலையை குடைந்து கட்டப்பட்டுள்ளதால், மேலிருந்து கீழாக கட்டப்பட்டுள்ளது. அதாவது முதலில் கோபுரம், பின்னர் அப்படியே கீழாக சென்று சிற்பங்கள், கருவறை, அடித்தளம் போன்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த ஒற்றைக் கற்றளி கோவில் , தனி ஒரு பாறையை மேலிருந்து கீழ்நோக்கி செதுக்கி அமைக்கப்பட்டுள்ளது. மரபுச் சின்னம் எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோயில் போன்று, கடினமான பாறை அடுக்குகளால் ஆன ஒரு பெரிய மலைப்பாறையில், 7.50 மீட்டர் ஆழத்திற்குச் சதுரமாக வெட்டியெடுத்து அதன் நடுப்பகுதி பாறையை கோயிலாக செதுக்கியுள்ளனர். இதை வெட்டுவான் கோயில் என அழைக்கின்றனர். ஒரு தனிக் கோயில் எப்படியெல்லாம் கருவறை, அர்த்தமண்டபம் என்று அமைக்கப்படுமோ, அதேபோன்று ஒற்றைப் பாறையிலே எழுப்பப்பட்ட அதிசயம் இந்தக் கோயில். தென் தமிழகத்தின் எல்லோரா என்று போற்றப்படும் இக்கோயிலை வெளிநாட்டினர் ஏராளமானோர் பார்வையிட்டுச் செல்கின்றனர்.

இந்த மலை தமிழக அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. விமானத்தின் முதல் தளத்தில் தட்சிணாமூர்த்தி, திருமால், விசாபகரணர், அக்கமாலையை கையில் ஏந்தி சன்னவீரம் தரித்த முருகன், சந்திரன், சூரியன் சிற்பங்கள் உள்ளன. கிரீடத்தில் உமா மகேஸ்வரர், மிருதங்கம் வாசிக்கும் தட்சிணாமூர்த்தி, நரசிம்மர், பிரம்மா உள்ளனர்.

மிருதங்கம் வாசிக்கும் தட்சிணாமூர்த்தி

இந்தியக் கோயில்களில், இந்தக் கோயிலில் மட்டுமே மிருதங்கம் வாசிக்கும் தட்சிணாமூர்த்தி சிலை செதுக்கப்பட்டுள்ளது. அவர் தமது முன் இடக்கரத்தில் மிருதங்கத்தைப் பிடித்திருக்கும் நிலையிலும், முன் வலக்கரத்தின் விரல்களால் மிருதங்கததை இசைக்கும் பாவனையிலும் அருள்புரிகிறார். மிருதங்கம் நடனத்துடன் தொடர்புடையது ஆதலால் இங்கே தட்சணாமூர்த்தி நடனக் கலையின் சிறப்பாய் உள்ளார்.

இங்குள்ள கழுகுமலை முருகன் கோயிலும் ஒரு குடைவரைக் கோயிலாகும். கழுகுமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

முருகப்பெருமான் ராஜபோகமாக வீற்றிருக்கும் தலம்

https://www.alayathuligal.com/blog/pgadjte6w3sdjygdbbkmwr56wnx5cr?rq

See this map in the original post