கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில்
சிறுமி வடிவில் இருபது கைகளுடனும், சிரித்த முகத்துடனும் காட்சியளிக்கும் அபூர்வ துர்க்கை அம்மன்
இராஜராஜ சோழன் மகனான இராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்டு 250 ஆண்டுகள் பிற்கால சோழ பேரரசின் தலைநகரமாக விளங்கிய தலம்தான் கங்கைகொண்ட சோழபுரம். இத்தலத்தில் அமைந்திருக்கிறது அவன் நிறுவிய பிரம்மாண்டமான பிரகதீஸ்வரர் கோவில். அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இக்கோவில், கும்பகோணத்திலிருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் இருக்கின்றது.
இராஜேந்திர சோழன், தான் வெற்றி பெற்ற தேசங்களில் இருந்து கொண்டு வந்த பல அற்புத சிற்பங்களை இக்கோவிலில் நிறுவியுள்ளான். சாளுக்கிய தேசத்தை வென்றதின் நினைவுச் சின்னமாக கொண்டு வரப்பட்ட இருபது கைகள் கொண்ட துர்க்கை அம்மன், ஒரே கல்லிலான நவகிரக சிற்பங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும்.
இந்த துர்க்கை அம்மன், சிரித்த முத்துடன் இருபது கரங்களில், பதினெட்டில் ஆயுதங்களை ஏந்தியபடி, மகிஷாசுரனை வதம் செய்யும் கோலத்தில், ஒன்பது வயது சிறுமியின் வடிவத்தில் காட்சி தந்து அருள்பாலிக்கின்றாள். துர்க்கை அம்மன் என்றாலே நம் எல்லோருக்கும் உக்கிரமான தோற்றம்தான் நினைவுக்கு வரும். ஆனால், இத்தலத்தில் துர்க்கை அம்மன், சிறுமி வடிவில் சிரித்த முகத்துடன் அருள்பாலிப்பதால் இவளை பக்தர்கள், 'மங்கள சண்டி' என்று அழைக்கின்றனர். சண்டி என்பதற்கு துர்க்கை எனப் பொருள். துர்க்கை அம்மனின் இந்த தோற்றத்தை நாம் வேறு எந்த கோவிலிலும் தரிசிக்க முடியாது.
துர்க்கை அம்மனுக்கு கோயிலின் இடது பக்கம் தனி சன்னதி உள்ளது. ராஜேந்திர சோழன் கோயிலுக்கு வந்தவுடன் முதலில் துர்க்கையை வழிபாடு செய்த பின் தான் சிவனை வணங்குவான். இதன் அடையாளமாக இன்றும் கூட ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில், முதலில் துர்க்கையை வழிபாடு செய்த பின்னர்தான் சிவனை தரிசிக்க செல்கின்றனர். பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை நாளில் இத்தேவிக்கு, காவடி எடுத்து விழாக் கொண்டாடப்படுகிறது. திருமணபாக்கியம், குழந்தை பாக்கியம், பதவி உயர்வு, பணியிட மாற்றம் ஆகியவற்றுக்காக இவளை வணங்குகின்றனர்.
அதேபோல, ஒற்றைக் கல்லாலான நவக்கிரக வடிவமைப்பும் சிறப்பானது. சூரியனை தாமரை வடிவில் சித்திரித்து, சுற்றிலும் மற்ற கிரகங்கள் எழுந்தருளியிருக்கும் வடிவ அமைப்பானது இந்தியாவில் வேறெங்கும் இல்லை. பீடம் தாமரை வடிவம். நடுவில் சூரியன். சூரியனுக்குரிய யந்திர வடிவில் 8 கிரகங்கள் சுற்றிலும் அமைக்கப்பட்டு, 7 குதிரைகள் பூட்டிய தேரில் மேற்கு நோக்கி சூரியன் அமர்ந்துள்ளார். தேரை அருணன் சாரதியாக இருந்து ஓட்டுகிறான். தேரிலுள்ள 10 கடையாணிகளும் கந்தர்வர்கள் எனக் கூறப்படுகிறது. நவக்கிரகங்கள் இந்த உலகை சுற்றி வருகின்றன. எனவே அதை யாரும் சுற்றக்கூடாது என்பதன் அடிப்படையில் இங்கு நவக்கிரகங்களை சுற்றமுடியாதபடி மண்டப அமைப்பு உள்ளது.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு
அபிஷேகத்தின்போது பச்சை நிறமாக மாறும் விநாயகர்
https://www.alayathuligal.com/blog/lzessptwa6hzshtmt8c2yn7l2nbacf