௳ (முகப்பு)

View Original

தேப்பெருமாநல்லூர் விசுவநாத சுவாமி கோவில்

நந்தியெம்பெருமான் வலதுக்காது மடங்கி இருக்கும் அபூர்வத் தோற்றம்

கும்பகோணத்திற்கு அருகே, சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலம் தேப்பெருமாநல்லூர். இறைவன் திருநாமம் விசுவநாத சுவாமி. இறைவியின் திருநாமம் வேதாந்த நாயகி.

இக்கோவிலின் மகா மண்டபத்திலிருந்து கிழக்கு வாசல் வழியாக வெளியே வந்தால் நந்தியெம்பெருமான் காட்சி தருகிறார். இங்குள்ள நந்தி பெருமானுக்கு ஒரு பக்க காது சிறியதாகக் காட்சியளிக்கின்றது. பிரளய காலத்தில் உலகமே மூழ்கியபோது இத்தலம் மட்டும் தண்ணீரில் மூழ்காமல் வெளியே தெரிந்தது. அப்போது பிரம்மா இத்தலத்தில் இறங்கிப் பார்த்தார். அங்கே விசுவநாத சுவாமி எழுந்தருளியிருப்பதைக் கண்டு வழிபட்டார். ஈசன் அப்போது ஜோதிர்லிங்கமாய் காட்சி கொடுத்தார்.

இந்த நிலையில் பிரளயத்தில் சிக்கிக் கொண்ட நந்தி இறைவனைத் தேடி இத்தலத்திற்கு வேகமாக வந்தது. அப்போது அது கால் சறுக்கி ஒரு பக்கமாக விழுந்துவிடவே, அதன் வலதுக்காது மடங்கி உள்நோக்கிச் சென்று விட்டது. இதனால் வருந்திய நந்தி இறைவனை நோக்க, நந்தியின் உள்ளப் போக்கை அறிந்த இறைவன், 'நந்தியே! வருந்தாதே. யார் ஒருவர் தங்கள் குறைகளை உன் வலக் காது இருந்த பக்கம் சொல்கிறார்களோ, அதனை நான் உடனே நிவர்த்தி செய்வேன்' என்று ஆறுதல் கூறினார். அதன்படி, இந்த நந்தியின் வலக்காதுப் பக்கம் தங்கள் குறைகளைக் கூறினால் அது நிவர்த்தி ஆகி விடுகிறது என்கிறார்கள்.

ருத்திராட்சம் பிரசாதமாகத் தரப்படும் தலம்

இக்கோவிலில் மாதம்தோறும் நடைபெறும் பிரதோஷ வழிபாடு பிரசித்தி பெற்றதாகும். நந்தியம் பெருமானுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர் கொண்டு அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. பிரதோஷ காலங்களில் சிவபெருமான் ருத்ராட்சக் கவசம் சாற்றப்பட்டு காட்சி அளிப்பது பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாக அமைகின்றது எனப் பக்தர்கள் கூறுகின்றனர். மேலும் பிரதோஷ தினங்களிலும், மகா சிவராத்திரி போன்ற விசேஷ தினங்களிலும் ருத்திராட்சம் பிரசாதமாகத் தரப்படுவது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

சிவபெருமானுக்கு ருத்ராட்ச மணி கவசம் சாத்தப்படும் தலம்

https://www.alayathuligal.com/blog/lc5e8xag9et35fe4jwj8llpwtt9f85

See this map in the original post