யந்திர சனீஸ்வரர் கோவில்
லிங்க வடிவில் காட்சி தரும் யந்திர சனீஸ்வரர்
நவகிரகங்களில் முக்கியத்துவம் வாய்ந்த சனி பகவான் சூரிய பகவானுக்கும், சாயா தேவிக்கும். புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையன்று பிறந்தார். இவர், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி-சந்தவாசல் சாலையில் 10 கி.மீ. தொலைவில் உள்ள ஏரிக்குப்பம் ஊருக்குத் தெற்கே 1 கி.மீ. தொலைவில் உள்ள காரிகைக் குப்பம் என்ற சிற்றூரில் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். கோயில் சுருவறையில், வேறெங்கும் காண இயலாத வகையில், லிங்க வடிவில் சனீஸ்வரன் காட்சியளிப்பது இந்த கோயிலின் தனிச் சிறப்பு
மூலவர் சனீஸ்வரரின் மேனியில் யந்திரம் பொருத்தப்பட்டுள்ளதால் லிங்க வடிவில் காட்சி தரும் அவரை யந்திர சனீஸ்வரர் என்றும் கூறுகின்றனர். ஆறடி உயரமும், இரண்டரை அடி அகலமும் உள்ள அந்த யந்திர சனீஸ்வரர் தாமரைப் பீடத்தில் நின்று கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார் என்பதும் அந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு. யந்திர சனீஸ்வரர் நின்றிருக்கும் பீடத்தில் மகாலட்சுமி யந்திரமும், ஆஞ்சநேயர் யந்திரமும், சனியின் தாயாரான சாயா தேவியின் யந்திரமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. கண்களைக் குறிக்கும் வகையில் வலதுபுறம் சூரியனும், இடதுபுறம் பிறைச் சந்திரனும் பொறிக்கப்பட்டுள்ளனர். சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் சனீஸ்வர பகவானின் வாகனமான காகத்தின் உருவம் உள்ளது.
சனீஸ்வரரின் மார்பு பகுதியில் அறுகோண யந்திரமும், நீர், நெருப்பு சம்பந்தப்பட்ட யந்திரமும் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் சிவன், ஆஞ்சநேயர், சனீஸ்வரன் ஆகியோருக்கான பீஜாட்சர மந்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஒரு கண்ணாடியை இந்த யந்திரத்தின் முன் வைத்து பார்த்தால், எழுத்துக்கள் நேராகத் தெரியும்படி அமைந்துள்ளது. இதுபோன்றதொரு அமைப்புடைய சிலை வடிவத்தை, அதிலும் சனீஸ்வர அம்ச சிலாரூபத்தை ஏரிக்குப்பம் தவிர வேறு எங்கும் காண்பதரிது.
பொதுவாக சனி பகவான் சன்னதி மேற்கு நோக்கி இருக்கின்ற நிலையில் இங்கு மட்டும் யந்திர சனீஸ்வரர் கிழக்கு நோக்கி திறநத வெளியில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.
யந்திர சனீஸ்வரர் கோவில் வரலாறு
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை ஆண்ட சம்புவராய மன்னர்களால் இக்கோவில் கட்டப்பட்டது. சம்புவராய மன்னரின் படைத்தளபதி ஒருவர் இந்த வழியாக சென்றபோது விபத்தில் பலத்த காயமடைந்தார். சனிதோஷம் இருப்பதால் இந்த விபந்து ஏற்பட்டதாகவும் அதன் பாதிப்பில் இருந்து விலகிட இந்த இடத்தில் சனீஸ்வரர் சிலையை மூல மந்திரத்துடன் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டும்படி படை தளபதிக்கு அசரீரி கூறியது. அதையடுத்து மன்னரின் அனுமதியுடன் லிங்க வடிவில்,மூல மந்திரத்துடன் சனீஸ்வரர் சிலையை தளபதி பிரதிஷ்டை செய்தார்.
நாசா விண்வெளிக் கழக நிபுணர்கள் கண்டுபிடிப்பு
சனி பகவானின் சிறப்பு குறித்து நாசா விண்வெளிக் கழக நிபுணர்கள் கூறுகையில் சனி கிரகத்தின் வடதுருவமும், யந்திர சனீஸ்வரரின் மூல மந்திர பிரதிஷ்டையும் நேர்கோட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்
சனி தோஷ நிவர்த்தி தலம்
கண்டகச் சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி இவை மூன்றும் கோச்சாரத்தில் இருக்கும்போது நவக்கிரக ஹோமமும், சனிபகவானுக்கு சாந்தியும் செய்வது அவசியம். இத்தோஷம் உடையவர்கள் இவரை வழிபடுவதால் நிவாரணம் பெறலாம்.
புதிய தொழில் தொடங்குபவர்கள்,நீதிமன்ற வழக்குகளால் அவதிப்படுபவர்கள், வீடு கட்டுபவர்கள் ஆகியோர் இக்கோவிலுக்கு வந்து அதன் ஆவணங்களை யந்திர சனீஸ்வரரின் மடியில் வைத்து வணங்குவது சிறப்பாகும். மேலும் கடன் பிரச்சனை, குழந்தைப்பேறு, பில்லி சூனியம் போக்குதல், விவசாயம் ஆகியவற்றுக்கும் இவரை வணங்கினால் நல்லபலன்கள் கிடைக்கும்.
வாரம்தோறும் சனிக்கிழமைகளில் ஏரிக்குப்பம் கிராமம் திருவிழாக்கோலம் பூண்டுவிடுகிறது. பல்வேறு ஊர்களிலிருந்து வரும் பக்தர்கள் ஏரிக்குப்பம் சனீஸ்வர பகவானை வணங்கி அவரது அருள் பெற்று தோஷம் நீங்கிச் செல்கிறார்கள்.