கோடீசுவரர் கோவில்
வெங்கடாஜலபதியாகக் காட்சி தரும் திரிபுரசுந்தரி அம்மன்
திருக்கோடிக்காவல் எனும் தேவாரத்தலம் கும்பகோணம், ஆடுதுறைக்கு அருகேயுள்ள சூரியனார் கோவிலிலிருந்து 5 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது.
ஒரு சமயம், ஆழ்வார்கள், வெங்கடாஜலபதியின் தரிசனத்திற்காக, திருப்பதி சென்றார்கள். அங்கு வெங்கடாஜலபதி, அவர்களுக்கு காட்சி தரவில்லை, மாறாக, ;திருக்கோடிக்காவில் திரிபுரசுந்தரி அம்மன், நீங்கள் விரும்பும் தரிசனம் கொடுப்பாள், அங்கே செல்லுங்கள்' என்று அசரீரியாக உத்தரவு பிறந்தது. ஆழ்வார்களும், ஆவலுடன் புறப்பட்டு, திருக்கோடிக்காவை அடைந்தனர். ஊரை நெருங்கியபோது, காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதைக்கடந்து வரமுடியாமல் ஆழ்வாராதிகள் சிரமப்பட்டபோது, அகத்திய முனிவர், அவர்கள் முன் தோன்றி, ஆலயத்திலுள்ள கரையேற்று விநாயகரை, மனதில் பிரார்த்தித்துக் கொள்ளும் படி கோரினார். அவர்களும் அவ்வாறே செய்ய, காவிரியில் வெள்ளம் குறைந்தது. ஆழ்வாராதிகள், கரையைக் கடந்து ஆலயத்தினுள் வர, அங்கு அம்பாள் அவர்களுக்கு வெங்கடாஜலபதியாக தரிசனம் தந்தருளினாள்.
அப்போது திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி அம்மன் கைகளில் இருந்த பாசமும் அங்குசமும் மறைந்து, சங்கும் சக்கரமும் இருந்தது. திருமாங்கல்யம் மறைந்து போய் கவுஸ்துப மணியாக மாறிப் போனது. மார்பினில் திருமகளும் நிலமகளும் குடி கொண்டு விட்டார்கள். செந்நிற பட்டாடை மறைந்து போய் பீதாம்பரம் மிளிறியது. அம்மன் நெற்றியில் மின்னும் குங்குமப் பொட்டுக்கு மாறாக கஸ்தூரி திலகம் பளிச்சிட்டது. மொத்தத்தில் பக்தனுக்காக அம்மன் திருப்பதி பெருமாளாக மாறி விட்டாள்.
இந்த வைபவம் இன்றும் திருக்கோடிக்காவலில் ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமையிலும் நடக்கிறது. அன்று நம் அனைவருக்கும் திரிபுரசுந்தரி வெங்கடாஜலபதியாகக் காட்சி தருகிறாள்,
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு
சகல பாவங்களும் தொலைந்து போகும் திருக்கோடிக்காவல்
https://www.alayathuligal.com/blog/7tgz57xr5jf5l6b6j4rb2mz7wwz9xx