௳ (முகப்பு)

View Original

யோகநந்தீசுவரர் கோவில்

நந்திதேவர், கொடிமரம் வித்தியாசமான நிலையில் அமைந்திருக்கும் தேவாரத்தலம்

கும்பகோணத்திற்கு அருகிலுள்ள தேவாரத்தலம் திருவிசநல்லூர். இறைவன் பெயர் யோகநந்தீசுவரர். இவர் ஏழு முனிவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததால் இவருடைய லிங்கத் திருமேனியில் எழு சடைகள் இருக்கின்றன.
பொதுவாக எல்லா கோவில்களிலும் ராஜகோபுரத்தை கடந்து உள்ளே நுழைந்தவுடன் முதலில் கொடி மரம் இருக்கும். பின்னர் பலிபீடம், நந்தி அமைந்திருக்கும். ஆனால் இக்கோவிலில், நந்தி முதலில் இருக்கும். மேலும் நந்தி தேவர் ஒரு கால் எடுத்து எழுந்த பாவனையிலும், திரும்பி வாசலைப் பார்த்த நிலையிலும் இருப்பார்.
ஒரு சமயம் பெரும் பாவங்கள் செய்த ஒருவன், தன் விதிப்படி மரணிக்க வேண்டிய தினத்தன்று, இக்கோவில் வாசலில் நின்று இறைவனை அழைத்தான்.அப்போது சிவபெருமான் நந்திதேவரிடம் வாசலில் நிற்பது யார் என்று கேட்டார். நந்திதேவர் வாசலை நோக்கி திரும்பி வந்தவனை பார்த்தார். அன்று பிரதோஷ தினமாக இருந்ததாலும், நந்திதேவர் பார்வை பட்டதாலும் உடனே அவன் பாவங்கள் தொலைந்தன.அதே சமயம் விதிப்படி அந்த மனிதனின் உயிரை பறிக்க எமன் வந்தான். நந்திதேவர் எமனை கொடிமரத்திற்கு வெளியே தடுத்து நிறுத்தி சண்டையிட்டு வெளியேற்றினார். இதனால்தான் நந்திதேவர் இக்கோவிலில், வேறு எந்த தலத்திலும் காணமுடியாத, மாறுபட்ட நிலையில் அமைந்திருக்கிறார்.

ரிஷப ராசிக்காரரர்களின் பரிகார தலம்

இங்கு நந்தி ரிஷபவாகனமாக காத்து நிற்பதால், ரிஷப ராசிக்காரரர்களின் (கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம் நட்சத்திரம்) பரிகார தலமாக விளங்குகிறது. இவரை பிரதோஷம், சிவராத்திரி, சோமவார நாட்களில் வழிபடுவது சிறப்பு.


சூரிய ஒளி கடிகாரம்

கோவிலின் அம்மன் சன்னதிக்கு எதிரில், சுமார் 700 ஆண்டுகள் பழைமையான சோழர் கால சூரியஒளி கடிகாரம் அமைந்துள்ளது. இச்சுவர்க் கடிகாரம் சூரிய ஒளி முள்ளின் மீது ஏற்படுத்தும் நிழலின் அடிப்படையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை சூரியனின் இயக்க அடிப்படையில் கணக்கிட்டு இக்கடிகாரம் நேரத்தை காட்டுகின்றது. கிரானைட் கல்லில் அரைக்கோள வடிவில் dial pad செதுக்கப்பட்டுள்ளது. நடுவில் பித்தளையால் செய்யப்பட்ட ஆணி செங்குத்தாக பொருத்தப்பட்டுள்ளது. சூரியனின் நிழல் இந்த ஆணியில் பட்டு நிழல் எந்த புள்ளியில் விழுகிறதோ அதுவே அப்போதைய நேரம் ஆகும்.

கார்த்திகை மாத அமாவாசையன்று கிணற்றில் கங்கை பொங்கும் அதிசயம்

இத்தலத்தில் சுமார் 370 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர் ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள். சிறந்த சிவபக்தர். இவர் கர்நாடக சமஸ்தானத்தில் திவானாகப் பணிபுரிந்தவர். இன்றளவும், சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக, இவர் வாழ்ந்த வீட்டின் கிணற்றில், ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத அமாவாசையன்று கங்கை பொங்கி எழுந்தருளுகிறாள். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த ஆச்சரியமான நிகழ்வுக்கு பின்னால் இறையருளின் மகத்துவம் இருக்கின்றது.

ஸ்ரீதர அய்யாவாள் தந்தையார் மறைந்த திதி கார்த்திகை மாதத்தில் வரும். அத்தகைய ஒரு நாளில் இவர் பிராமணர்களுக்கு உணவளிப்பதற்காக அந்தணர்களை எதிர்பார்த்து தன் வீட்டு வாசலில் காத்திருந்தார். அப்போது தாழ்த்தப்பட்டவர் ஒருவர் அவர் இல்லம் வந்து பசியால் துடிப்பதாக சொன்னார். உடனே அந்தணர்கள் உண்பதற்காக வைத்திருந்த உணவை அந்த தாழ்த்தப்பட்டவருக்கு அளித்து மகிழ்ந்தார். சிரார்த்த சமையலை திதி கொடுக்கும் அந்தணர்கள் மட்டுமே உண்ண வேண்டும். மீதம் உள்ளதை பசுவுக்குத்தான் தருவார்கள். அந்த நியதியை அய்யாவாள் மீறியதால், அந்தணர்கள் வெகுண்டனர் ஸ்ரீதர அய்யாவாள் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக கங்கையில் நீராடி விட்டு வந்தால்தான் அவர்களால் திதி கொடுக்க முடியும் என்றனர். சிவபக்தரான ஸ்ரீதர அய்யாவாள் இறைவனைமனம் உருக வேண்டி, கிணற்றடியில் நின்றபடி கங்காஷ்டகம் பாடினார். ஐந்தாம் பாடல் பாடியவுடன் கிணற்றில் கங்கை பொங்கி வழிந்தது. கிணற்றின் நீர்மட்டம் விறுவிறுவென ஏறி, வழிந்து, அந்தத் தெரு முழுதும் கங்கை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்பொழுது தான் அந்த அந்தணர்கள் ஐயாவாளின் மகிமையை அறிந்தனர். மன்னிப்பும் கேட்டனர்.
இன்றளவும் கார்த்திகை அமாவாசையன்று, 300 ஆண்டுகளுக்குமுன் கங்கை பொங்கி வந்ததுபோல, அய்யாவாள் இல்லக் கேணியில் நீர் பொங்கி வருவதைக் காணலாம். நீராடலாம். கார்த்திகை மாதம் பத்து நாள் விழா நடக்கும். பத்தாம் நாள் கார்த்திகை அமாவாசையன்று காலை கிணற்றுக்கு பூஜை செய்வார்கள். முதலில் வேத விற்பன்னர்கள் நீராடியபின் பக்தர்கள் நீராடுவார்கள். அன்று முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் நீராடினாலும், கிணற்று நீர் குறையாமலேயே இருப்பது அதிசயம்!

See this map in the original post