காரைக்குடி நூற்றியெட்டு பிள்ளையார் கோவில்
ஒரே கோவிலில், பல கோலங்களில் காட்சிதரும் நூற்றியெட்டு பிள்ளையார்கள்
சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி நகரத்தில் அமைந்துள்ளது நூற்றியெட்டு பிள்ளையார் கோயில். இக்கோவிலில் 108 பிள்ளையார் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 54 பிள்ளையார் விக்ரகங்கள் மேல் வரிசையிலும், மீதி 54 விக்கிரகங்கள் கீழ் வரிசையிலும் அமைந்துள்ளன. மேல் வரிசையில் உள்ள பிள்ளையார்களின் தும்பிக்கை இடது பக்கம் சுழித்தும், கீழ் வரிசையில் உள்ள பிள்ளையார்களின் தும்பிக்கை வலது பக்கம் சுழித்தும் இருக்கின்றன.
தாமரை மலர் மேல் நிற்கும் பிள்ளையார், வல்லப கணபதி, மகா கணபதி, சித்தி புத்தி விநாயகர், மூஷிக கணபதி, சிம்ம வாகனத்தின் மேல் வீற்றிருக்கும் ஹேரம்ப கணபதி, சங்கு சக்கரம் ஏந்திய விநாயகர், நர்த்தன விநாயகர் ஆகியவை இங்கு எழுந்தருளி இருக்கும் விநாயகரின் சில கோலங்கள் ஆகும். நூற்றியெட்டு பிள்ளையார்களை ஒரு சேர தரிசிக்க முடியும் என்பதால், பல வெளியூர் மக்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றார்கள்
பிள்ளையார், அவரை வழிபடுவோரின், வாழ்வில் வரக்கூடிய அனைத்து இன்னல்களையும், தீர்க்கவல்லவர் என்று நம்பப்படுவதால், இங்கு உள்ளூர் மக்களும் அதிக அளவில் வருகின்றனர். அதனால், மக்கள் புது முயற்சிகள் எதுவும் எடுப்பதற்கு முன், இங்கு வந்து பிள்ளையாரை பிரார்த்தித்து விட்டு, அதற்குப் பின்பே ஆரம்பிக்கின்றனர். புது முயற்சிகள் ஆரம்பிப்பதற்கு முன் பிள்ளையாரை வழிபட்டால், அம்முயற்சிகள் தடங்கல்கள் ஏதுமின்றி, நல்ல பலனைக் கொடுக்கும் என்று பெரிதும் நம்பப்படுகிறது.
இங்கு பிள்ளையாரை குளிர்விப்பதற்கு, பக்தர்கள், அவருக்கு மிக விருப்பமான லட்டு மற்றும் மோதகம் ஆகியவைகளை காணிக்கையாகப் படைக்கின்றனர்.