௳ (முகப்பு)

View Original

பாபநாசநாதர் கோவில்

பக்தனின் தாம்பூல எச்சிலை அணியாக ஏற்ற உலகம்மை

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் எனும் ஊரில் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் நமச்சிவாயக் கவிராயர். இவர் சிங்கை உலகம்மை பிள்ளைத் தமிழ், சிங்கை உலகம்மை கலித்துறை அந்தாதி, சிங்கை உலகம்மை கொச்சகக் கலிப்பா, சிங்கை உலகம்மை பதிற்றுப்பத்து அந்தாதி, சிங்கை உலகம்மை சந்த விருத்தம், சிங்கை சிலேடை வெண்பா ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

நமச்சிவாயக் கவிராயர் பாபநாசத்தில் எழுந்தருளியிருக்கும் பாபநாசநாதர் மற்றும் உலகம்மை மீது பெரும் பக்தியும் பேரன்பும் செலுத்தி வந்தார். குறிப்பாக உலகம்மை மீது அளவு கடந்த அன்பு கொண்டிருந்தார்.

இவர் தினந்தோறும் அர்த்தசாமத்தில் பாபநாசத் கோவிலுக்குச் சென்று உலகம்மையைத் தொழுதுவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது பரவசத்தில் பக்திப் பாடல்களைப் பாடிகொண்டே வருவார். ஒரு நாளிரவு இவர் பாடியவாறே வீடு திரும்பும்போது உலகம்மை இவர் பாடல்களைக் கேட்டவாறே இவருக்குத் தெரியாமல் பின்தொடர்ந்தார். கவிராயர் தரித்திருந்த தாம்பூலத்தின் எச்சில் அவர் பாடி வரும்போது, வாயிலிருந்து தெரித்து அம்பிகையின் ஆடையின் மீது பட்டது. அக்கோலத்துடனேயே அம்பிகையும் கோயிலுக்கு எழுந்தருளினாள். மறுநாள் காலை அர்ச்சகர் அம்பாள் ஆடையில் படிந்திருந்த தாம்பூல எச்சில் திவலைகளைக் கண்டு மனம் வருந்தி, மன்னனிடம் முறையிட, அரசனும் பிராயச்சித்தம் செய்யப் பணித்து, இப்பாதகச் செயலைச் செய்தவரைத் தண்டிப்பதாகக் கூறினான்.

அன்றிரவு மன்னன் கனவில் அம்பிகை தோன்றி, நடந்ததைக் கூறினாள். கவிராயரின் தாம்பூல எச்சிலைத் தான் அணியாக ஏற்றுக் கொண்டதாகக் கூறி மறைந்தாள்.விழித்த மன்னன் மறுநாள் காலை கவிராயரை அழைத்து வரச்செய்து, அவருடைய பக்தியை அளவிட எண்ணி, அம்பாளின் கரத்தில் தங்கப் பூச்செண்டு ஒன்றை வைத்து தங்க கம்பிகளால் சுற்றிக் கட்டச் சொன்னான். மன்னன், நமச்சிவாயக் கவிராயரிடம், தாங்கள் அம்பிகைதாசர் என்பது உண்மையானால்,இதோ உலகம்மை கையிலிருக்கும் தங்கப் பூச்செண்டு, தாங்கள் பாடப் பாட அப்பூச்செண்டை சுற்றியிருக்கும் தங்க நார்கள் அறுந்து, இப்பூச்செண்டு தானாய் உங்கள் கையில் வந்து விழ வேண்டும் என்றான். அவரும் உலகம்மை அந்தாதி எனும் நூலை இயற்றிப் பாடினார். 'அபிராமி அந்தாதி'யைப் போல் இந்த நூலும் மிகுந்த சிறப்புடையது. அந்தாதி பாடப்பாட அம்மையின் கரத்துள்ள பூச்செண்டின் தங்க நார்கள் ஒவ்வொன்றாய் அறுந்து விழுந்தன.

'விண்டல நின்ற சரற்கால சந்திர சுவேதமுக

மண்டலமும் கையில் மலரொடும் தோளில் வழிந்த ரத்ன

குண்டலமும் பொலி வாலப் பிராய குமாரத்தியாய்

செண்டலர் செங்கை உலகாள் என் நாவில் சிறந்தவளே'

எனும் பாடலை பாடி முடித்த சமயம் படபடவென்று அனைத்து தங்க நாரும் அறுந்து, தங்கச் செண்டு உலகம்மையின் கையிலிருந்து நமச்சிவாய கவிராயர் கரத்திற்குத் தாவி வந்தது. மன்னன் முதற் கொண்டு அனைவரும் நமச்சிவாய கவிராயர் பாதத்தில் விழுந்து வணங்கினர். மன்னன் அவருக்குப் பல பரிசுகள் கொடுத்து கௌரவித்தான். இன்றும் அந்த தங்கப் பூச்செண்டை நாம் உலகம்மையின் கையில் காணலாம்.

இந்நிகழ்ச்சியின் காரணமாக நமச்சிவாயக் கவிராயரின் பெண் வழிச் சந்ததியினர் பாபநாசம் கோவிலுக்குச் சென்றால் அர்ச்சகர்கள் உலகம்மையின் கையிலிருக்கும் பூச்செண்டை எடுத்து அவர்களுக்கு தருவது வழக்கமாக இருந்தது.

மஞ்சள் பிரசாத மகிமை

உலகம்மை சன்னதி முன்பு ஒரு உரல் இருக்கிறது. இதில் பெண்கள் விரலி மஞ்சளை இட்டு அதனை இடிக்கின்றனர். இந்த மஞ்சளாலேயே அம்பாளுக்கு அபிஷேகங்கள் நடக்கிறது. அபிஷேகிக்கப்படும் மஞ்சள் தீர்த்தத்தை சிறிது அருந்தினால், திருமண, புத்திர பாக்கியங்கள் கிடைக்கும், பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பர் என்பது நம்பிக்கை. மேலும் இத்தீர்த்தம் சகல ரோக நிவாரணியாகவும் இருக்கிறது.