௳ (முகப்பு)

View Original

கருவளர்சேரி அகஸ்தீஸ்வரர் கோவில்

மழலைச் செல்வம் அருளும் அகிலாண்டேஸ்வரி

மண்ணால் ஆன சுயம்பு திருமேனி உடைய அம்பிகை

திரையிடப்பட்டு இருக்கும் அம்பிகையின் பாதி திருமேனி

கும்பகோணம் - வலங்கைமான் பாதையில் மருதா நல்லூரில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கருவளர்சேரி. இறைவன் திருநாமம் அகஸ்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி. இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. அகத்திய முனிவர் சிவலிங்க பிரதிஷ்டை செய்து, தனது மனைவி லோப முத்திரையுடன் வழிபட்ட தலம் இது.

இத்தலத்து அம்பிகை அகிலாண்டேஸ்வரி மண்ணால் ஆன சுயம்பு திருமேனி உடையவள். அதனால் அம்பாளுக்கு இங்கு அபிஷேகம் கிடையாது. அர்ச்சனை மூல ஸ்ரீ சக்ர மகா மேரு மற்றும் ஸ்ரீ சக்ரத்திற்கும் செய்யப்படுகிறது. இப்படி மண்ணாலான சுயம்பு திருமேனி உடைய அம்பிகையை நாம் வேறு தலத்தில் பார்ப்பது அரிது. மேலும், அம்பாளின் முழு உருவத்தை சிவராத்திரி மற்றும் நவராத்திரியின் ஒன்பது நாட்களில் மட்டுமே நாம் காண முடியும். மற்ற நாட்களில் அம்பாளின் பாதி உருவம் மட்டுமே பார்க்கும் அளவிற்கு திரையிடப்பட்டு இருக்கும். அதாவது சாதாரண நாட்களில் நாம் அம்பிகையின் முகத்தை மட்டுமேதரிசிக்க முடியும்.

அகிலாண்டேஸ்வரி கரு வளர்க்கும் நாயகி என்று அழைக்கப்படுகிறார் - கரு வளர அருள் புரியும் தெய்வம். கருவில் இருக்கும் சிசுவிற்கு வளர்ச்சி வரம் தருகிறாள். இத்தலத்துக்கு அருகாமையில் உள்ள புகழ் பெற்ற திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலை இந்த ஆலயம் நிறைவு செய்கிறது. கருவைக் காக்கும் தெய்வம் கர்ப்பரட்சாம்பிகை. அந்த அம்பிகை கருவில் இருக்கும் சிசுவிற்கு பாதுகாப்பு அருளுகிறாள். இதனால் கர்ப்பிணிகளுக்கு ஒரு புனித தலத்தில் (கருவளர்சேரி) வளர்ச்சியும், மற்றொரு இடத்தில் (திருக்கருகாவூர்) பாதுகாப்பு வரமும் கிடைக்கும்.

கருவளர்சேரி திருத்தலத்துக்கு வந்து அகிலாண்டேஸ்வரி அம்பிகையை வழிபடுவோருக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் கர்ப்பம் தரித்த பெண்களும் இங்கு வந்து வழிபடுவதால், சிக்கலற்ற பிரசவம் நடக்கும். திருமணமாகி வெகுநாட்களாகியும் குழந்தையில்லாமல் ஏங்கும் பெண்கள் இக்கோவிலுக்கு வந்து அன்னையை மனமுருக வேண்டி, படி பூஜை செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபடவேண்டும். வழிபாட்டுக்குப் பின் சன்னிதியில் பூஜை செய்த மஞ்சள் கிழங்கினை வாங்கி வந்து, தொடர்ந்து பூஜித்து வர வேண்டும். இங்கு தரப்படும் மஞ்சள் பிரசாதம் சக்தி வாய்ந்தது. இப்படிச் செய்தால், தடைகளை எல்லாம் நீக்கி, கருவளர் நாயகி மகப்பேற்றை அருள்வாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கர்ப்பிணிகளும் இந்த பூஜையை செய்து பயன்பெறலாம். பூஜை செய்து வழிபட்டுச் சென்ற பெண்கள் சில மாதங்களிலேயே கருவுற்று, மீண்டும் இக்கோவிலுக்கு வந்து தொட்டில், தங்களுக்கு வளைகாப்பு நடைபெறும்போது கொடுக்கப்படும் வளையல் ஆகியவற்றை தங்கள் நேர்த்திக்கடனாக சமர்ப்பிக்கிறார்கள்.

மேலும், கருவளர்சேரிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்யும் அனைவரின் உடல் ரீதியாக உள்ள தோஷங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

படங்கள் உதவி : திரு. விக்னேஷ் குருக்கள், ஆலய அர்ச்சகர்

See this map in the original post