திருநாங்கூர் மதங்கீசுவரர் கோவில்
ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் அமைச்சராக விளங்கும் ஸ்ரீராஜமாதங்கீசுவரி
சீர்காழியில் இருந்து 10 கி.மீ.தொலைவில் உள்ளது திருநாங்கூர் மதங்கீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் ஸ்ரீராஜமாதங்கீசுவரி, இறைவிக்கு அஞ்சனாட்சி, கடம்பவனவாசினி என்று மேலும் 16 பெயர்கள் உண்டு. அம்பிகை, . ஸ்ரீ சக்கரத்தில் எழுந்தருளி இருக்கும், அரசர்க்கெல்லாம் அரசி என்று போற்றப்படும் ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் அமைச்சராக விளங்குபவள்.
பிரம்மதேவனின் புதல்வரான மதங்க முனிவரின் மகளாக பிறந்தமையால், மாதங்கி என அழைக்கப்படுகிறார். அம்பிகை மாதங்கி, சிவபெருமானை இத்தலத்துக்கு அருகில் உள்ள திருவெண்காட்டு தலத்தில் திருமணம் புரிந்தாள். அதனால் இங்கு திருமண கோலத்தில் எழுந்தருளி இருக்கிறாள். மேல் இரு கரங்களில் பத்மத்தையும், சக்கரத்தையும் சுமந்து கீழ் இரு கரங்களில் அபய, வரத முத்திரைகளுடன் காட்சி தருகிறாள்.
சரஸ்வதி தேவிக்கு கல்வி உபதேசம் செய்தவள்
சகல கலைகளுக்கும் அதிபதியாக விளங்குபவள் மதங்கீசுவரி. சரஸ்வதி தேவிக்கு குருவாக இருந்து கல்வி உபதேசம் செய்தவள் என்பதால் இவளிடம் வேண்டிக்கொள்ள கல்வியில் சிறக்கலாம் என்பது ஐதீகம். புதிதாக பள்ளியில் சேர்க்கும் குழந்தைகளை பௌர்ணமி மற்றும் அஷ்டமி தினங்களில் அம்பாள் சன்னதி முன்பு நாக்கில் தேன் வைத்து எழுதி 'அக்ஷராப்பியாசம்' செய்கின்றனர். இவ்வாறு செய்வதால் அவர்களது கல்வி சிறக்கும் என்கிறார்கள். பேச்சு வராத குழந்தைகளை அன்னையின் சன்னிதி முன் அமரச் செய்து, அவர்கள் நாக்கில் தேனைத் தடவி மூல மந்திரத்தை எழுத, அவர்கள் மெல்ல மெல்ல பேசத் தொடங்குகின்றனர். இந்த அம்பிகையை தரிசிப்பவருக்கு கலை, கல்வி, தேர்வில் தேர்ச்சி, உயர் பதவி, தொழில் மேன்மை, பேச்சு வன்மை அனைத்தும் கிடைக்கப்பெறும்.
திருமண தடை நீங்க மட்டை தேங்காயுடன் அர்ச்சனை
திருமணத் தடை உள்ளவர்கள், அஷ்டமி அன்று இவளுக்கு பாசிப்பருப்பு பாயாச நைவேத்யம் படைத்து, மட்டை உரிக்காத முழு தேங்காயை அர்ச்சனை பொருட்களுடன் தட்டில் வைத்து அன்னைக்கு அர்ச்சனை செய்கின்றனர். பின் அந்த தேங்காயை, 11 மாதங்கள் வீட்டில் வைத்து, மாதந்தோறும் அஷ்டமி அன்று பூஜை செய்து வர வேண்டும். அப்படி செய்தால் 11 மாதங்களுக்குள் அவர்கள் திருமணம் நடைபெறுவது உறுதி என்கிறார்கள். திருமணத்திற்கு பின்னர், தம்பதிகள் ஆலயம் வந்து, அன்னைக்கு அபிஷேகம் செய்து, புத்தாடை அணிவித்து, சன்னிதியை 11 முறை வலம் வருவார்கள். பிறகு அந்த தேங்காயை அம்மன் சன்னிதிலேயே கட்டிச் செல்வது வழக்கமாக உள்ளது.