௳ (முகப்பு)

View Original

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில்

மிகச் சிறிய கருவறை கொண்ட மாரியம்மன் கோவில்

மாரியம்மனுக்கு நைவேத்தியங்களை ஊட்டி விடும் வித்தியாசமான நடைமுறை

சேலம் மாநகரின் மையப் பகுதியில் உள்ளது கோட்டை மாரியம்மன் கோவில். சேலத்தில் உள்ள எட்டு மாரியம்மன்களில் கோட்டை மாரியம்மன் தான் பெரியவள். எட்டு மாரியம்மன்களுக்கும் தலைமையாக விளங்குவதால், 'எட்டுப்பேட்டைகளைக் கட்டியாளும் அன்னை கோட்டை மாரி' என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இந்தக் கோவில் மணிமுத்தாறு நதிகரையில் அமைத்துள்ளது,

இந்தக் கோவிலின் கருவறை மிகவும் சிறியது.. தமிழ்நாட்டிலேயே சிறிய கருவறை உள்ள அம்மன் கோவில் இதுவாகத்தான் இருக்கும். எவ்வளவு பெரிய அந்தஸ்து உள்ளவர்களும் குனிந்து மண்டியிட்டு தலை வணங்கி கும்பிடவேண்டும் என்பதற்காக இவ்வாறு இருப்பதாகக் காரணம் சொல்லப்படுகிறது. கருவறையில் மாரியம்மனின் சிரசில் ஜூவாலா கிரீடம், அக்னி ஜூவாலையுடன் ஒளி வீசிக் கொண்டு இருக்கிறது. அக்கிரீடத்தில் நாகம் படம் எடுத்துள்ளது போன்ற அமைப்பு உள்ளது. நான்கு கரங்களுடன் அன்னை விளங்குகிறாள். வலது மேற்கரத்தில் நாகபாசமும், உடுக்கையும் ஏந்தி இருக்கிறாள். வலது கீழ்க்கரத்தில் திரிசூலம் விளங்குகிறது. இடது மேற்கரத்தில் அங்குசமும், அமுத சின்னமும் ஏந்தியவளாய் வீற்றிருக்கிறாள். இடது கீழ்கரத்தில் கபாலம் காணப்படுகிறது. அன்னை வலது காலைத் தொங்கவிட்டுக் கொண்டு, இடது காலை மேல் யோகாசனமாக மடித்து வைத்துக் கொண்டு ஈசான திசை நோக்கி எழுந்தருளி இருக்கின்றாள்.

பொதுவாக எல்லா கோவில்களிலும், பூஜா காலங்களில் நைவேத்தியம் தெய்வங்களுக்கு முன் படைக்கப்படும். ஆனால் இக்கோவிலில் நைவேத்தியம், மாரியம்மனுக்கு படைக்கப்படுவதில்லை. மாறாக நைவேத்தியத்தை எடுத்து மாரியம்மனுக்கு ஊட்டியே விடப்படுகிறது என்பது சிறப்பம்சம். இந்த நடைமுறை வேறு எந்த கோவிலிலும் கடைபிடிக்கப்படுவதில்லை.

பிரார்த்தனை

மண் உரு சாத்துதல் : அம்மை நோய் கண்டவர்கள் அம்மனின் தீர்த்தத்தை வாங்கிச் சென்று நோய் குணமான பின்பு நேர்த்திக்கடனாக பொம்மை உருவங்களை தம் தலை மீது சுமந்து கொண்டு, கோவிலை மூன்று முறை வலம் வர வேண்டும்.

கண்ணடக்கம் சாத்துதல் : கண்ணில் பூ விழுந்தாவோ அல்லது வேறு சில நோய்கள் ஏற்பட்டாலோ அம்மனிடம் வேண்டிக் கொண்டால் குணமடையும். நேர்த்திக்கடனாக அம்மனுக்கு பொன்னாலோ அல்லது வெள்ளியாலோ தகடுகள், கண்ணடக்கம் செய்து அம்மனுக்கு சாற்றுவார்கள்.

உருவாரம் சாத்துதல் : நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அம்மனை வேண்டிக்கொண்டு குணமாகிய பின்பு நோயின் காரணமாக எந்த பகுதி பாதிக்கப்பட்டதோ அதே போன்ற உருவ பொம்மையை காணிக்கையாக அளிப்பார்கள்.

அடியளந்து கொடுத்தல் : பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து, மூன்று முறை கோவிலை சுற்றி வருகின்றனர். இதற்கு அடியளந்து கொடுத்தல் என்று பெயர்.

உப்பு மிளகு போடுதல் : பக்தர்கள் தங்களுக்கு ஏற்பட்ட குறையோ அல்லது நோயோ நீங்கிட வேண்டும் என்று வேண்டிக் கொள்பவர்கள், குங்குமம் கலந்த உப்பை பலி பீடத்தின் மீது போட்டு நீர் ஊற்றுவார்கள். நீருடன் கலந்து உப்பு எவ்வாறு கரைந்து விடுகிறதோ அதேபோன்று நோயும் நீங்கிவிடுவதாக ஐதிகம்.

ஆடித் திருவிழா

கோட்டை மாரியம்மன் கோவிலின் மிகப்பெரிய விழா, ஆடித் திருவிழா ஆகும். இவ்விழாவின் போது பூச்சாட்டுதல் என்னும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த பூச்சாட்டுதலின் போது சேலத்தில் உள்ள ஏனைய ஏழு மாரியம்மன் கோவில்களுக்கும் இங்கிருந்துதான் பூ எடுத்துச் சென்று பிற மாரியம்மன் கோவில்களில் பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

See this map in the original post