திருநாகை சவுந்தரராஜப்பெருமாள் கோவில்
தாயார் வெள்ளி கருடி வாகனத்தில் எழுந்தருளும் திவ்ய தேசம்
நாகப்பட்டினம் சௌந்தரராஜ பெருமாள் கோவில், சோழ நாட்டு திவ்யதேசங்களில் ஒன்று. மூலவரின் திருநாமம் நீலமேகப்பெருமாள். தாயாரின் திருநாமம் சௌந்தர்யவல்லித்தாயார். ஆதிசேஷன் தவம் புரிந்து பெருமாளின் சயனமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட திருத்தலம். ஆதிசேஷன் வழிபட்ட காரணத்தாலேயே இவ்வூர் நாகன்பட்டினம் என்றாகி, பின்னர் நாகப்பட்டினம் என மாறியது.
கருவறையில் நின்ற கோலத்தில், நெடியோனாக மார்பில் பெரிய பிராட்டியாருடன், சங்கு, சக்கரம், கதை தாங்கி தான முத்திரையுடன் எழிலாக, மந்தகாச புன்னகையுடன் திருமங்கையாழ்வாரை மயக்கிய 'நாகை அழகியாராக' நீலமேகப்பெருமாள் சேவை சாதிக்கின்றார். தங்க கவசத்தில் பெருமாளை சேவிக்க ஆயிரம் கண் வேண்டும். இவர் இடையை இத்திருத்தலத்திற்கே உரித்தான சிறப்பான தசாவதார ஒட்டியாணம் அலங்கரிக்கின்றது. நின்ற, இருந்த, கிடந்த என்ற மூன்று திருக்கோலச் சேவையும் இத்தலத்தில் உண்டு. மூலவர் நின்ற திருக்கோலம். “வீற்றிருந்த பெருமாள்” என்று அமர்ந்த திருக்கோலமும், பள்ளி கொண்ட திருக்கோலத்தில் அரங்கநாதனும் இங்கு காட்சி தருகின்றனர். நாகராஜனுக்கு மூன்று திருக்கோலங்களிலும் எம்பெருமான் சேவை சாதித்ததாக ஐதீகம் .
ஸ்ரீசௌந்தரராஜப்பெருமாள் ஆலயத்தில் மட்டுமே, ஸ்ரீசௌந்தர்யவல்லி தாயாருக்கு 'கருடி வாகனம்'(பெண் கருட வாகனம்) இருப்பது வேறு எந்த திவ்ய தேசத்திலும் இல்லாத தனிச்சிறப்பாகும். இத்திருக்கோயிலில் கருடபகவானை ஸ்ரீசௌந்தரராஜ பெருமாளே வீற்றிருக்கச் செய்ததால், இந்த சந்நிதியில் மட்டும் கருடபகவானுடன் கருடியும் வாகனமாக சேர்ந்து எழுந்தருளி உள்ளார். ஆகையால், பெருமாள் கருடவாகனத்திலும், தாயார் கருடிவாகனத்திலும் சேர்ந்துஎழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதிப்பர். அதன் படி, ஸ்ரீசௌந்தர்யவல்லித் தாயாரின் ஆனி பிரம்மோற்சவத்தின் நான்காம் திருநாள் மாலை 6 மணிக்கு உற்சவர் ஸ்ரீசௌந்தர்யவல்லித் தாயார், வெள்ளி கருடி வாகனத்திலும், ஸ்ரீசௌந்தரராஜ பெருமாள் வெள்ளி கருட வாகனத்திலும் எழுந்தருளி , கோவில் நந்தவனத்தில் வலம் வந்து சேவை சாதிக்கின்றனர். பெருமாள் கருட வாகனத்தின் சிறகுகள் மேல் நோக்கிய நிலையில் உள்ளன. தாயார் கருடி வாகனத்தின் சிறகுகள் கீழ் நோக்கிய நிலையில் உள்ளன.
இக்கோவில் ஆடிப்பூர பிரம்மோற்சவத்தின் நான்காம் நாள் மாலை, சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாள், வெள்ளிக் கருடி வாகனத்தில் மாடவீதியில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள் .