கமலவரதராஜப் பெருமாள் கோவில்
வலது பாதத்தில் ஆறுவிரல்கள் உள்ள சுந்தர மகாலட்சுமி
செங்கல்பட்டு - மதுராந்தகம் பாதையில் படாளம் கூட்டு ரோட்டிலிருந்து இடது பக்கம் செல்லும் சாலையில் சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ளது அரசர்கோயில். இந்த ஊரில் அமைந்துள்ளது கமலவரதராஜப் பெருமாள் கோவில். இத்தலத்துப் பெருமாள் தம்முடைய கரத்தில் ஒரு தாமரை மொக்கை வைத்துக்கொண்டு, ஸ்ரீதேவி-பூதேவியோடு நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
தாயார் சுந்தர மகாலட்சுமியின் வலது பாதத்தில் ஆறு விரல்கள் இருப்பது ஒரு அரிய காட்சியாகும். இத்தல சம்பிரதாயப்படி முதலில் தாயாரையே தரிசிக்க வேண்டும். தாயார் சுந்தர மகாலட்சுமி, பெயருக்கு ஏற்றாற்போல் அழகு சுந்தரியாக காட்சி தருகிறாள். மேலிரு கரங்கள் தாமரை மலர்களை ஏந்தியிருக்க, கீழிரு கரங்கள் அபய-வரத முத்திரைகள் காட்ட, பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். கற்பூர ஆரத்தியின் போது தாயாரின் வலது பாதத்தை தரிசிக்க வைக்கிறார் பட்டர். இடது கரத்துக்குக் கீழே பத்மாசனமாக மடித்து வைத்த நிலையில் உள்ள வலது பாதத்தில், சுண்டு விரலை அடுத்து அழகான ஆறாவது விரல் அமைந்திருக்கிறது. இந்த ஆறுவிரல்கள் உள்ள பாதத்தை தரிசிப்பவர்களுக்கு, சுந்தர மகாலட்சுமி அதிர்ஷ்டத்தை அள்ளி அள்ளித் தருவாள் என்பது ஐதீகம்.
தாயார் சன்னதி முன், ஒரு இசை மண்டபம் உள்ளது. அங்குள்ள தூண்களை நாம் தட்டினால் ஒவ்வொரு தூணும், ஒவ்வொரு ஸ்வரத்தை எழுப்புகிறது. நான்கு வேதங்களைக் குறிக்கும் விதமாக இங்குள்ள தூணிலுள்ள ஒரு சிறு துளையில் குச்சி ஒன்றை உள்ளே செருகினால், அது மறு பக்கம் வெளி வரும் போது நான்கு பாகங்களாகப் பிளந்து வருகிறது.
ஆறு என்பது சுக்கிரனின் எண் ஆகும். இந்த தாயாரிடம் சுக்கிரன் ஐக்கியமானதாக ஐதீகம். எனவே சுக்கிரனால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட வேண்டிய தலம் இதுவாகும். அதிக செல்வம் பெற, வீடு வாங்க திருமண பாக்கியம்,பிள்ளைப்பேறு கிடைக்க, இந்தத் தாயாரை வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.