௳ (முகப்பு)

View Original

சுப்பிரமணிய சுவாமி கோவில்

முருகப்பெருமான் அடியெடுத்துக் கொடுத்த கந்தபுராணம் அரங்கேறிய தலம்

புராணங்களில் சிறப்புடையது என்று எல்லோராலும் போற்றப்படுவது கந்த புராணம். இந்த நூலில் சொற்சுவையும் பக்திச் சுவையும் மிகுந்திருப்பதால்,'கந்த புராணத்தில் இல்லாதது வேறு எந்த புராணத்திலும் இல்லை' என சிறப்பிக்கப்படுகின்றது.

கந்தபுராணம், பதினோராம் நூற்றாண்டில் கச்சியப்ப சிவாச்சாரியார் என்பவரால் இயற்றப்பட்டது. அர்ச்சகரான இவர் அனுதினமும் காஞ்சீபுரம் குமரக்கோட்டத்து குமரனை பூஜித்து வந்தார். அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், 'வடமொழியில் மிகவும் பிரசித்திப்பெற்ற கந்த புராணத்தின் ஆறு சங்கிதைகளுள், சங்கர சங்கிதையின் முதற்காண்டமாகிய சிவ ரகசியக் காண்டத்தில் உள்ள எமது வரலாற்றை கந்தபுராணம் என்ற பெயரில் செந்தமிழில் பாடுவாயாக' என்று கூறினார். மேலும் 'திகடச் சக்கரச் செம்முகம் ஐந்துளான்' என முதல் அடியையும் எடுத்துக் கொடுத்தார்.

இதையடுத்து கச்சியப்ப சிவாச்சாரியார் கந்த புராணத்தை எழுதத் தொடங்கினார். காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்தில் உள்ள மாவடிக்குச் சென்று தினமும் 100 பாடல்களை அங்கிருந்து எழுதி, பின்பு தினமும் இரவு அன்று எழுதிய நூறு பாடல்களையும் குமரக்கோட்டம் முருகன் கருவறையில் வைத்து அடைத்து விடுவார். மறுநாள் அதிகாலை, முருகப்பெருமானின் கருவறையைத் திறக்கும்போது, அப்பாடல் களில் தவறுகள் இருந்தால் குமரக்கோட்டம் குமரனே திருத்தம் செய்திருப்பாராம். கூடவே 'காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி' என காப்புச் செய்யுளையும் இயற்றி, கந்தபுராணத்தை நிறைவு செய்தார் கச்சியப்ப சிவாச்சாரியார்.

அதைத் தொடர்ந்து முருகப்பெருமானின் ஆணைப்படி 'கந்த புராணம்' குமரக்கோட்டத்தில் அரங்கேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அரங்கேற்றத்திற்கு வந்திருந்த தமிழ் புலவர்களுக்கு ஏற்பட்ட ஐயப்பாட்டைப் போக்க, முருகப்பெருமானே புலவர் வடிவில் வந்து அவர்களின் ஐயத்தைப் போக்கினார். கந்த புராணம் அரங்கேறிய மண்டபத்தை, இன்றைக்கும் ஆலயத்தில் தரிசிக்கலாம்.

இத்தலத்தில் முருகப்பெருமான் படைப்புத் தொழிலை மேற்கொள்ளும் 'பிரம்ம சாஸ்தா' வடிவில் அருள்கிறார். முருகர் மான் தோலை இடுப்பிலும், தர்ப்பையால் ஆன அரைஞாண் கொடியும் அணிந்துள்ளார். கீழ் வலது திருக்கரத்தில் அபயம் வழங்கும் திருக்கோலம், மேல் வலது திருக்கரத்தில் ருத்திராட்ச மாலை, கீழ் இடக்கரத்தை மடி மீது பொருத்தி, மேல் இடக்கரத்தில் கமண்டலத்துடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

அருணகிரிநாதர் இங்கு வந்து, அழகன் முருகனின் அழகில் மயங்கி, திருப்புகழ் பாடியிருக்கிறார்.

See this map in the original post