ராமர் கோவில் தாசரதி கல்யாணராமர் கோவில்
திருமணத்தடை நீங்க சீதா தேவிக்கு மஞ்சள் கிழங்கு மாலை
சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் தொடர்வண்டி பாதையில், கடம்பத்தூரை அடுத்த செஞ்சி பானம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து அரை கி.மீ. தொலைவில் உள்ளது ராமர் கோவில் என்னும் ஊர். இந்த ஊரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான தாசரதி கல்யாணராமர் அமைந்துள்ளது.
ராமரும் அவரது வானரப் படையினரும் சீதையைத் தேடிக் கொண்டிருந்தபோது இத்தலத்துக்கு வந்தனர். அப்போது குஸஸ்தலை ஆற்றங்கரை ஓரத்தில் வானரப்படைகளுக்காக உணவு சமைத்திட மடம் அமைத்து சமைக்கும் பணி நடந்தது. அந்த மடம் அமைந்த இடம் மடத்து குப்பம் என்று இன்று அழைக்கப்படுகிறது. சீதையைத் தேடுவது குறித்து சற்றுத் தொலைவில் கவலையுடன் ராமர் ஓரிடத்தில் நின்று கொண்டிருந்தார். அவ்வாறு ராமர் நின்ற இடமே இன்று ஊராகி, ராமர் கோவில் என வழங்கப்படுகிறது.
ராமாவதாரம் நிறைவடைந்து கிருஷ்ணர் அவதரிக்க வேண்டிய காலம் வந்தது. விசுவாமித்திரர் மற்றும் சப்தரிஷிகள் ராமனின் திருக்கல்யாணக் காட்சியைக் காண விரும்பினர். அதற்காக குஸஸ்தலை ஆற்றின் கரையில் ஒரு பெரிய யாக வேள்வி நடத்தினர். ராமனும் சீதையும் திருமணக் கோலத்தில் காட்சிதர, அருகில் லட்சுமணன் துணை நிற்க, அனுமன் கைபொத்தி வணங்க, அங்கிருந்த அனைவருக்கும் காட்சி தந்தனர். பின்னர் உலக மக்கள் அனைவரும் வழிபட வேண்டி, இத்தலத்திற்கு அருகில் பர்ணசாலையில் தவம் செய்து கொண்டிருந்த சாலிஹோத்ர மஹரிஷி, ஸ்ரீலட்சுமணன் உடனுறை சீதாதேவி சமேத தாசரதி கல்யாணராமர் பிரதிஷ்டை செய்து கோவிலை உருவாக்கினார். முன்பு ராமன் நின்ற அந்த இடம், திருமணக்கோல ராமன் காட்சி தந்த அந்த கிராமமே,பின்பு ராமன் கோவில் என்று ஆனது.
கருவறையில் மூலவராக, ஸ்ரீ ராமர், ஸ்ரீலட்சுமணன், சீதாபிராட்டி, அனுமன் ஆகியோர் உள்ளனர். ஆனால் மற்ற ராமர் கோவில்களில் உள்ளது போல் இல்லாமல், இங்கே சீதை ராமனுக்கு வலது புறத்திலும், லட்சுமணன் இடது புறத்திலும், அனுமன் ராமருக்கு இடதுபுறத்தில் தெற்கு நோக்கி அஞ்சலி ஹஸ்தத்துடன் இருக்கிறார். வலது புறத்தில் சீதையுடன் கல்யாணக்கோலத்தில் நின்றதால் தந்தை பெயருடன் சேர்த்து தாசரதி கல்யாணராமன் சந்நிதி என்று அழைக்கிறனர்.
பிரார்த்தனை
இக்கோவிலில் ஒவ்வொரு புனர்பூச நட்சத்திரத்தன்றும் நடைபெறும் திருமஞ்சனத்தில் கலந்து கொள்வோருக்கு திருமணம் கைகூடும். திருமணத் தடை, குடும்பத்தில் கணவன் மனைவியரிடையே ஏற்படும் பிரச்சனைகளுக்கு இங்கு சீதைக்கு மஞ்சள் கிழங்கு மாலை சாற்றி பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். கருவறையில் உள்ள பால ஆஞ்சநேய சுவாமிக்கு செந்தூரக்காப்பு பிராத்தனை செய்து கொண்டால், வெகு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.