௳ (முகப்பு)

View Original

சர்க்கார் பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில்

பிரதோஷ காலங்களில், இரண்டு நந்தி சிலைகளுக்கு பூஜை நடத்தப்படும் தலம்

திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கி.மீ. தொலைவிலுள்ள சர்க்கார் பெரியபாளையம் என்ற ஊரில் அமைந்துள்ளது சுக்ரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் ஆவுடைநாயகி. ராமாயண காலத்தில் ராமபிரானுக்கு உதவி புரிந்த சுக்ரீவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழங்கப்பட்டவர் இத்தல இறைவன். இதன் காரணமாகவே மூலவர் சுக்ரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இதனை மெய்ப்பிக்கும் விதமாக ஆலயத்தின் அர்த்த மண்டபத்தில் சுக்ரீவன், சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது.

எந்த சிவன் கோவில்களிலும் இல்லாத சிறப்பாக, இந்த ஆலய மூலவரின் கருவறைக்கு நேர் எதிரில் பத்ரகாளி அம்மன் சன்னிதி இடம்பெற்றுள்ளது.

ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு நந்திகள் அமர்ந்திருக்கும் அபூர்வ கோலம்

இந்தக் கோவிலில் இரண்டு நந்திகள் உள்ளன. முதலில் உள்ள நந்திக்கு கொம்பு, காது இல்லை. ஒரு சமயம், இந்த கோவில் நந்தி அருகிலுள்ள விவசாய நிலத்துக்கு சென்று மேய்ந்துள்ளது. ஆத்திரமடைந்த விவசாயி, இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து நந்தியின் காதையும், கொம்பையும் வெட்டினார். மறுநாள் கோவிலுக்கு வந்து பார்த்தபோது, கற்சிலையான நந்தியின் காதில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. அதிர்ச்சியடைந்த விவசாயி, தனது தோட்டத்துக்கு வந்தது நந்தி என்பதை அறிந்து இறைவனை வேண்டி மன்னிப்பு கேட்டார்.

பின்னர் தவறுக்கு பிராயச்சித்தமாக, மற்றொரு நந்தி சிலை செய்து அதனை கோவிலில் பிரதிஷ்டை செய்துள்ளார். பழைய நந்தியை அகற்ற முயற்சித்து முடியாமல் போனதால், அந்தப் பணியை கைவிட்டு விட்டனர். மறுநாள் வந்து பார்த்தபோது, பழைய நந்தி முன்பும், புதிய நந்தி பின்னாலும் மாறி இருந்துள்ளது. ஆகவேதான் இந்த கோவிலில் இரண்டு நந்திகள் அமைந்துள்ளன. பிரதோஷ காலங்களில், இரண்டு நந்தி சிலைக்கும் பூஜை நடத்தப்படுகிறது. இப்படி இரண்டு நந்திகள் ஒன்றன்பின் ஒன்றாக அமர்ந்திருக்கும் கோலத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோவில், சிதம்பரம், பேரூர் கோவில்களுக்கு அடுத்து, சிறப்பான வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது.

மூலவர் சுக்ரீஸ்வரர்

சுக்ரீஸ்வரர் கருவறைக்கு நேர் எதிரில் பத்ரகாளி அம்மன் சன்னிதி

ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு நந்திகள் அமர்ந்திருக்கும் அபூர்வ கோலம்

See this map in the original post