ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
ஸ்ரீரங்கநாதருக்கு, மாமனார் தீபாவளி சீர் அளிக்கும் சாளி உற்சவம்
தீபாவளி என்றால், மாமனார் மாப்பிள்ளைக்குச் சீர் செய்வது வழக்கம். அந்த வழக்கப்படி, தன் மகள் ஆண்டாளை ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு மணமுடித்து தந்த பெரியாழ்வார், தன் மாப்பிள்ளைக்கு தீபாவளி சீர் செய்யும் வைபவமானது ஸ்ரீரங்கம் கோவிலில் தீபாவளியன்று 'சாளி உற்சவம்' என்று கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீரங்கத்தில், ரங்கநாதர் ஒவ்வொரு வருடமும் தீபாவளிப் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார். தீபாவளிக்கு முந்தைய நாள் மாலை, மேள தாளங்கள் முழங்க, மூலவரான பெரிய பெருமாள் எண்ணெய் அலங்காரம் செய்து கொள்வார். கோவிலில் கைங்கரியம் செய்வோர்களுக்கும் அன்று பெருமாளின் சார்பாக எண்ணெய், சீகைக்காய் உள்ளிட்டவை வழங்கப்படும். அன்று இரவு, உற்சவரான நம்பெருமாளுக்கும் எண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்படும். அதன்பின், கோவிலில் எழுந்தருளியிருக்கும் ரங்கநாயகித் தாயார், ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் ஆகியோரின் சந்நதிகளுக்கெல்லாம் எண்ணெய், சீகைக்காய், மஞ்சள் உள்ளிட்டவற்றைப் பெருமாள், அர்ச்சகர் மூலம் அனுப்பி வைப்பார். தீபாவளித் திருநாளன்று அதிகாலையில் ரங்கநாயகித் தாயாருக்கும், ஆழ்வார் ஆச்சாரியார்களுக்கும் எண்ணெய் அலங்காரம் செய்யப்படும். அனைவரும் புத்தாடையும் மலர் மாலைகளும் அணிந்து கொள்வார்கள்.
காலை பத்து மணியளவில் நம்பெருமாள், சந்தனு மண்டபத்தில் எழுந்தருளித் திருமஞ்சனம் கண்டருள்வார். பின்னர் பெரியாழ்வார் தன் மாப்பிள்ளைக்கு தீபாவளி சீர் சமர்ப்பிப்பார். ஒவ்வொருவரும் தன் குருவுக்குச் செலுத்தப்படும் அதே மரியாதையை, தன் மாமனாருக்கும் செலுத்த வேண்டும் என்பது மரபு. அந்த வகையில், நம்பெருமாள் பெரியாழ்வாருக்கு மரியாதை செய்து, அவரிடமிருந்து தீபாவளிச் சீரைப் பெற்றுக் கொள்கிறார். பெரியாழ்வாரின் சார்பில், அரையர்கள் நம்பெருமாளின் திருவடிகளைச் சுற்றி நாணய மூட்டைகளைச் சீராக வைப்பார்கள். நாணய மூட்டைகளுக்குச் சாளி என்று பெயர். இதை ஜாலி (சாளி) அலங்காரம் என்பர். ஜாலி அலங்காரம் என்பது, ஆயிரம் ஒரு ரூபாய் நாணயங்களை இரண்டு புது கைலிகளில் மூட்டையாகக் கட்டி, பெருமாள் திருவடிகளில் சமர்ப்பிப்பது. நாணய மூட்டைகளை தீபாவளிச் சீராகப் பெரியாழ்வார் சமர்ப்பிப்பதால், 'சாளி உற்சவம்' என்று அழைக்கப்பட்ட இந்த உற்சவம், நாளடைவில் 'ஜாலி உற்சவம்' என்றாகிவிட்டது. வேத பாராயணமும் மங்கல வாத்தியங்களும் முழங்க இந்த வைபவம் நடைபெறும். தனது மாமனாரான பெரியாழ்வார் தனக்கு அளித்த இந்த தீபாவளிச் சீரை அனைவருக்கும் காட்டி, மாமனாரின் பெருமையைப் பறைசாற்றுவதற்காக அந்த நாணய மூட்டைகளோடு இரண்டாம் பிராகாரத்தில் நம்பெருமாள் வலம் வருவார். மாலையில் கிளி மண்டபத்துக்கு எழுந்தருளும் நம்பெருமாள் அங்கே காலைமுதல் காத்திருக்கும் ஆழ்வார் ஆச்சாரியார்களை ஒவ்வொருவராக அழைத்து, அவர்களுக்குப் புத்தாடை, சந்தனம், வெற்றிலைப் பாக்கு, புஷ்பங்கள், பழங்கள் உள்ளிட்டவற்றைத் தீபாவளிப் பரிசாகத் தந்து கௌரவிப்பார். இந்தத் திருக்காட்சியை தீபாவளித் திருநாளில் தரிசித்தால் ஆடை களுக்கும், பணவரவுக்கும் தட்டுப்பாடு உண்டாகாது என்பது நம்பிக்கை.