௳ (முகப்பு)

View Original

அய்யன்பேட்டை சுந்தரேசுவரர் கோவில்

சிவபெருமான் கையில் தராசுடனும், அம்பிகை கையில் படியுடனும் வணிக வியாபாரிகளாக காட்சி தரும் தலம்

கும்பகோணம் - பூந்தோட்டம் வழித்தடத்தில் மருதுவாஞ்சேரி என்ற கிராமத்தில் இருந்து இரண்டு கி மீ தொலைவில் உள்ளது அய்யன்பேட்டை. இறைவன் திருநாமம் சுந்தரேசுவரர். இறைவியின் திருநாமம் மீனாட்சி. இக்கோவிலில், சிவபெருமானின் உற்சவமூர்த்தி கையில் தராசு பிடித்த கோலத்திலும், அன்னை பார்வதி கையில் அரிசி அளக்கும் படியுடனும் காட்சி தருவது தனிச்சிறப்பாகும். இப்படி இறைவனும், இறைவியும் வணிக வியாபாரிகளாக காட்சி தருவது நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாத காட்சியாகும். கையில் தராசுடன் திகழும் இறைவனின் திருநாமம் செட்டியப்பர். அரிசி அளக்கும் படியுடன் இருக்கும், அம்பிகையின் திருநாமம் படியளந்த நாயகி.

இப்படி சிவபெருமானும், பார்வதியும் வணிக வியாபாரிகளாக காட்சி தருவதன் பின்னணியில் ஒரு சுவையான வரலாற்று நிகழ்ச்சி உள்ளது.

நாயன்மார்களான திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் ஒரு சமயம் திருவீழிமிழலைக்கு தங்கள் அடியார் கூட்டத்துடன் வந்து தங்கி இருந்து சைவத் தொண்டு ஆற்றிக் கொண்டிருந்தனர். அப்போது கடுமையான வறட்சி ஏற்பட்டது. உணவுப் பற்றாக்குறையால் மக்கள் பட்டினியாக இருந்தனர். இதனால் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் தங்கள் அடியவர் கூட்டத்திற்கு ஏற்பட்டிருக்கும் உணவு பஞ்சத்தை சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமான் அவர்களை ஆசிர்வதித்து, தினமும் இரண்டு பொற்காசுகளை திருவீழிமிழலை கோவிலில் அவர்களுக்குக் கிடைக்கும்படி வழங்கினார். ஆனால் அந்த தங்க நாணயங்களை கொடுத்து, எங்கு சென்று உணவு பொருட்களை வாங்குவது என்று தெரியவில்லை. அப்போது, ​​சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி, அய்யன்பேட்டை என்ற இடத்தில் இருந்து உணவுப் பொருட்களை வாங்குங்கள், ஆண்டார்பந்தியில் உணவு படையுங்கள் என்று அறிவுறுத்தினார். அய்யன்பேட்டையை அடைந்த நாயன்மார்கள், சிவபெருமானும், பார்வதி தேவியும் அங்கு வியாபாரம் செய்வதைக் கண்டு வியந்தனர். மளிகை பொருட்களை விற்பதற்காக சிவபெருமான் கையில் தராசுடனும், அம்மன் அரிசியை அளக்கும் படியுடனும் காட்சியளித்தார்கள். எனவே இக்கோவிலின் இறைவன் செட்டியப்பர் என்றும், மீனாட்சி அம்மன் படியளந்த நாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

வியாபாரத்தில் வெற்றி பெற வழிபட வேண்டிய கோவில்

புதிதாய் வியாபாரம் தொடங்குவோர், தொழில் செய்வோர், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டவர்கள் ,வறுமையில் சுழல்பவர்கள் இங்கு வந்து வழிபட்டால் தொழில் சிறக்கும், செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை. இங்கு அட்சய திரிதியை, மாதாந்திர பரணி நட்சத்திர நாட்கள், சித்திரை பரணி நட்சத்திர நாள், வரலக்ஷ்மி விரதம், வெள்ளி கிழமைகளில் வந்து முறைப்படி வழிபட வியாபாரத்தில் , வெற்றி பெற்று வாழ்க்கையில் வளம் கொழிக்கும் என்கிறார்கள்.

திருவீழிமிழலையில் பெற்ற படிக்காசினை மாற்றி பொருட்கள் வாங்கிய இடம் அய்யன் பேட்டை. இந்த நிகழ்வை ஆண்டுதோறும் ஐதீக விழாவாக, சித்திரை பரணி நட்சத்திர நாளன்று 'வியாபார விழா' என்னும் பெயரில் இங்கு வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்கள். வணிகத்தைப் போற்றும் திருவிழா, தமிழகத்திலேயே இங்கு மட்டுமே நடைபெறுகிறது. அந்நாளில் ஏராளமான வணிகர்கள் தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இது வியாபாரத் தலம் என்பதால் பெரும்பாலும் கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், நாமக்கல் பகுதியைச் சேர்ந்த வணிகர்கள் வந்து வணங்குகிறார்கள்.

தொழில் முன்னேற்றம் இல்லாதவர்கள், எதனை தொட்டாலும் நஷ்டம் காண்பவர்கள் மற்றும் அனைத்து விதமான நஷ்டங்களும் தீர இத்தல வழிபாடு கைகொடுக்கும்.

சிவபெருமான் திருநாவுக்கரசருக்கும், திருஞானசம்பந்தருக்கும் படிக்காசு வழங்கிய நிகழ்வினைப் பற்றிய பதிவு

சிவபெருமான் அப்பர், சம்பந்தருக்கு படிக்காசு அளித்த தலம் (20.06.2024)

https://www.alayathuligal.com/blog/mex52bke3xml6jypxey6ff9p88fpd7-d6nbk

தகவல், படங்கள் உதவி : திரு சுரேஷ் குருக்கள், ஆலய அர்ச்சகர்

கையில் தராசுடன் சிவபெருமான் - அரிசி அளக்கும் படியுடன் அம்பிகை

See this map in the original post