சுப்பிரமணிய சுவாமி கோவில்
கருவறையில் முருகப்பெருமானுடன் சிவபெருமானும் சேர்ந்து அருள் பாலிக்கும் தலம்
திருவிடைக்கழி,சிதம்பரத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், திருக்கடவூருக்கு தென்மேற்காக அமைந்துள்ளது. திருக்கடவூரில் இருந்து தில்லையாடிக்குச் செல்லும் வள்ளியம்மை நினைவு வளைவு சாலைவழியாக 3 கி.மீ. தெற்காகச் சென்று மேற்காக திரும்பினால் இத்திருத்தலத்தை அடையலாம்.இறைவர் திருப்பெயர் காமேசுவரர். இறைவியார் திருப்பெயர் காமேசுவரி. முருகனின்திருப்பெயர் சுப்பிரமணிய சுவாமி. இத்தலத்தில் இரண்டு வெவ்வேறு தலமரங்கள் உள்ளன; இவற்றுள் குரா மரம் முருகப் பெருமானுக்கும், மகிழ மரம் இறைவனுக்கும் தல மரங்களாம்.சுப்பிரமணியக் கடவுள் இக்குராமரத்தின் கீழ் யோக நிட்டையில் இருக்கின்றாராதலின் இங்கமர்ந்து தியானம் செய்தல் சிறப்புடையதாகின்றது.
கருவறையில் முருகப்பெருமானுடன் சிவபெருமானும் சேர்ந்தே அருள்பாலிக்கிறார்.இங்குள்ள முருகப்பெருமானுக்கு மயிலுக்குப் பதிலாக யானை வாகனமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.மூலத்தானத்தில் முதற்கண் பிரதான மூத்தியாக சுப்பிரமணியப் பெருமானும், பின்னால் உள்ளடங்கிச் சிவலிங்க மூர்த்தமும் காட்சி தருகின்றனர். இருமூர்த்தங்களுக்கு உள்ள தனித்தனி விமானங்களில், முருகனுடைய விமானம் சற்று உயரமாகவும், இறைவனுடைய விமானம் சற்று தாழவும் உள்ளது.