திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்
திருவேங்கடவனின் மாமனார்
வைண மத ஆச்சார்யரான இராமானுசரின் சீடர்களில் ஒருவர் அனந்தாழ்வான். கர்நாடகத்திலுள்ள மாண்டியா மாவட்டத்தில் பிறந்த இவருடைய இயற் பெயர் அனந்தன். இவர் இராமானுசரின் விருப்பத்திற்கிணங்க, திருமலையில் நந்தவனம் அமைத்து, அதில் மலரும் பூக்களை பறித்து தினமும் மாலை தொடுத்து திருவேங்கடவனுக்கு சமர்பித்து வந்தார்.
இவரின் நந்தவனத்தில், திருமலை பட்டத்தரசியான அலர்மேல்மங்கை நாச்சியாரோடு திருவேங்கடவன் இரவு நேரங்களில் உலாவும் போது ஒருநாள் இதனை கண்ணுற்ற அனந்தாழ்வார் யாரோ ஒரு காதல் இணைகள் தன் நந்தவனத்தில் புகுந்து பாழ்ப்படுத்துவதாக எண்ணி பிடிக்க முயற்சித்தார். உடனிருந்த ஆண்மகன் தப்பிக்க பெண்மகள் மட்டும் அனந்தாழ்வரிடம் பிடிபட எப்படியும் இவளை மீட்க அவள் காதலன் வருவான் என அந்நந்தவனத்திலேயே அலர்மேல்மங்கை நாச்சியாரை பிணையாக சிறைப்படுத்தினார்.
பொழுது விடிந்து வழக்கம்போல் அன்றலர்ந்த மலர்களை மாலைகளாக்கி திருவேங்கடவன் சன்னதியடைய அங்கே மார்புறை நாச்சியாராகிய அலர்மேல்மங்கை திருவேங்கடவன் மார்பில் இல்லாதிருக்கக் கண்டு அஞ்சி நடுங்கினார். முன்னிரவில் தானே தன் மனைவியாளோடு நந்தவனத்திற்கு வந்ததுவும், அனந்தாழ்வாரின் பிணையாக நந்தவனத்தில் கட்டுண்டு இருப்பவள் அனைத்து உயிர்களுக்கும் அன்னையாகிய அலர்மேல்மங்கை நாச்சியாரே என திருவேங்கடவன் தெரிவிக்க ஒரு நொடியும் ஐயனை அகலாத அன்னை தன் செய்கையால் ஒர் இரவு முழுதும் பிரிய நேரிட்டதை எண்ணி, அனந்தாழ்வார் மிக்க வருத்தம் கொண்டார். அதற்கு ஈடுசெய்யும் பொருட்டு அவரே நாச்சியாரின் தகப்பனாராக இருந்து மீண்டும் திருவேங்கடவனுக்கு மணம் முடித்து சேர்த்து வைத்தார். இச்செயலால் திருமலை உறையும் திருவேங்கடவனுக்கு இவர் மாமனார் என அன்றிலிருந்து அழைக்கப்பட்டு வருகிறார்.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு
திருப்பதி பெருமாளுக்கு முகவாயில் பச்சைக் கற்பூரம் சாற்றும் வழக்கம் ஏற்பட காரணமாக இருந்த கடப்பாரை
https://www.alayathuligal.com/blog/8r2h5k9nc4zyxc85agwjcf5fww5jhw