௳ (முகப்பு)

View Original

பெரியதிருமங்கலம் அருங்கரை அம்மன் கோவில்

பெண்கள் வந்து வணங்க அனுமதி இல்லாத அம்மன் கோவில்

கரூர் மாவட்டம் சின்ன தாராபுரத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது பெரியதிருமங்கலம். இந்த ஊரில் பாயும் அமராவதி ஆற்றின் கரையில் அம்மன் கோவில் உள்ளது. நல்லதாய் என்று முதலில் பெயர் பெற்றிருந்த இந்த அம்மன், பின்னர் ஆற்றின் கரையில் எழுந்தருளி இருப்பதால் அருங்கரை அம்மன் என்று அழைக்கப்படுகின்றார்.

இந்தக் கோவிலுக்கு உள்ளே செல்ல பெண்களுக்கு அனுமதியில்லை. அவர்கள் வாசலில் நின்று வழிபடலாம். பெண் குழந்தைகள் கூட கோவிலுக்குள் செல்ல அனுமதி கிடையாது. வெளியில் நின்று வணங்கும் பெண்கள், அமராவதி ஆற்றில் குளித்துவிட்டு, தலை முடியாமல், ஈரத்துணியுடன் வழிபட வேண்டும். ஆண்கள் மட்டுமே கோவிலுக்குள் சென்று வழிபடுகின்றனர். மேலும், இங்கு செவ்வாய்க்கிழமை மட்டுமே கோயில் திறக்கப்பட்டு நள்ளிரவில் பூஜை நடக்கிறது. மற்ற நாட்களில் கோவில் இரவும், பகலும் அடைக்கப்பட்டே இருக்கும்.

மஞ்சள், குங்குமம் பிரசாதத்திற்கு பதிலாக மடப்பள்ளி அடுப்பு சாம்பல் பிரசாதம்

அம்பாள் கோயில்களில் வழக்கமாக தரப்படும் மஞ்சள், குங்கும பிரசாதமும் இங்கு தரப்படுவதில்லை. அவளுக்கு நைவேத்தியம் தயாரிக்கும் அடுப்பிலுள்ள சாம்பலையே தருகின்றனர். அம்பாளுக்கு பூஜை முடிந்தபின்பு, படைக்கப்பட்ட பூஜைப் பொருட்கள், மற்றும் நேர்த்திக்கடனாக செலுத்தும் வாழை, தானியங்கள் போன்றவற்றை கோயில் முன் மண்டபத்தில் இருந்து "சூரை' (எறிதல்) விடுகின்றனர். இதனை பெண்கள் தங்களது சேலையில் பிடித்துக் கொள்கின்றனர். அம்பாள் பிரசாத பொருட்களின் வடிவில் பெண்களுக்கு அருளுவதாக நம்பிக்கை.

கோவில் வரலாறு

முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த மீனவர்கள், அமராவதி ஆற்றில் வலைவீசிய போது, பெட்டி ஒன்று சிக்கியது. அதற்குள் ஒரு அம்மன் சிலை இருந்தது. ஆற்றங்கரையிலுள்ள மரத்தின் அடியில் அம்பாளை வைத்து வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் அவர்கள் அவ்விடத்தை விட்டு சென்றுவிடவே, மணல் மூடி பெட்டி மண்ணுக்குள் புதைந்து விட்டது. பின்னர் நல்லதாய் என்ற கால்நடைகளை மேய்க்கும் தொழிலைச் செய்து வந்த சிறுமி, ஒரு நாள் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது ஒரு பசு மட்டும் மரத்தின் அடியில் இருந்த மணல் மேட்டின் மீது பால் சொரிந்ததைக் கண்டாள் வியப்புற்று அருகில் சென்று பார்த்தபோது ஒரு மேடு இருந்தது அதன் மீது அவள் அமர்ந்தாள் அதன்பின் எழவில்லை. சிறுமியைக் காணாததால் ஊரில் இருந்த ஆண்கள் அவளைத்தேடி இங்கு வந்தபோது சிறுமி மணல் திட்டில் அமர்ந்திருந்ததைக் கண்டனர் அவர்கள் சிறுமியை வீட்டிற்கு வரும்படி அழைத்தனர் அங்கிருந்த வர மறுத்த சிறுமி அவர்களிடம், "நான் இங்கேதான் இருக்க விரும்புகிறேன் என்னைக்கண்ட இந்தநூளில் இதே நேரத்தில் மட்டும் எனக்கு பூஜை செய்து வழிபடுங்கள் என்று சொல்லிவிட்டு ஜோதியாக மாறி மறைந்துவிட்டாள் பின் அவர்கள் சிறுமியை அம்பாளாக எண்ணி உருவம் ஏதுமில்லாமல் வழிபட்டு வந்தனர் பிற்காலத்தில் இங்கு கோயில் கட்டப்பட்டது.

See this map in the original post