சிவசைலநாதர் கோவில்
வீதி உலாவிற்கு தங்க கைக்கடிகாரம் அணிந்து வரும் அம்பிகை
திருநெல்வேலி மாநகரிலிருந்து மேற்கே சுமார் 57 கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ள தேவார வைப்புத் தலம் சிவசைலம். இத்தலம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் சிவசைலநாதர். இறைவியின் திருநாமம் பரமகல்யாணி.
இத்தலத்தில் அம்பிகைக்கு தனி சன்னதி கட்ட ஏற்பாடாகி கொண்டிருந்த வேளையில், சிவசைலத்திற்கு அருகே உள்ள சிநேகபுரி (தற்போதைய ஆம்பூர்) என்னும் ஊரில் வாழ்ந்த அந்தணர் ஒருவரின் கனவில் தோன்றி அந்த ஊரில் உள்ள கிணறு ஒன்றில் அம்மையின் திருமேனி ஒன்று நான்கு கரங்களுடன் ஜலவாசமாக இருந்து வருவதாகவும், அந்த அம்பாள் திருமேனியை எடுத்து சிவசைலத்தில் கட்டப்படும் கோவிலுக்குள் பரமகல்யாணி என்ற பெயர் சூட்டி பிரதிஷ்டிக்கும் படி கூறியருள்கிறார் சிவபெருமான். அந்த அந்தணரும் தான் கண்ட கனவை ஊர் மக்களுக்கும், மன்னனுக்கும் தெரியப்படுத்தி, அந்த குறிப்பிட்ட கிணற்றில் தேடிட சிவபெருமான் கூறியது போலவே ஒரு நான்கு கரங்கள் கொண்ட அழகிய அம்மையின் திருவுருவ சிலை கிடைக்க பெற்றது. அந்த அம்மையின் திருவுருவை மங்கள வாத்தியங்கள் முழங்க அங்கிருந்து எடுத்து வந்து சிவசைலம் கோவிலில் பிரதிஷ்டை செய்ததாகவும் வரலாறு கூறுகிறது.
இங்குள்ள அம்பிகை நான்கு கரங்கள் கொண்டு அழகே உருவாக புன்முறுவல் பூத்த முகத்தவளாய் அளவில் சற்றே பெரிய உருவில் காட்சித் தருகிறாள். பாண்டிய நாட்டில் பிரசித்தி பெற்ற அநேக கோவிலின் அம்பிகைகள் இருகரம் கொண்டவர்களாக காட்சியளிக்க, இங்கு அம்பிகை பரமகல்யாணி, நான்கு கரங்கள் கொண்டு காட்சியளிப்பது சிறப்பம்சம் ஆகும். இங்குள்ள உற்சவர் பரமகல்யாணி அம்பிகையும் நான்கு கரங்கள் கொண்டு காட்சியளிக்கிறாள்.
உற்சவர் பரமகல்யாணி அம்பிகைக்கு தங்கக் கை கடிகாரம் ஆபரணமாக அணிவிக்கப்படுவது சிறப்பம்சம். விழாக் காலங்களில் இடது கரத்தில் தங்க கைக்கடிகாரத்தை ஆபரணமாக சார்த்துவார்கள்.இந்த அலங்கார நடைமுறை வேறு எந்த தவத்து அம்பிகைக்கும் செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.