திருப்புலிவனம் வியாக்ரபுரீசுவரர் கோவில்
சிம்ம குரு தட்சிணாமூர்த்தி
காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில் சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் திருப்புலிவனம். இறைவன் திருநாமம் வியாக்ரபுரீசுவரர். இறைவியின் திருநாமம் அபிதகுசாம்பாள், மூலவர் சுயம்பு மூர்த்தி. ஆவுடையார் சதுர வடிவில் தாமரை மீது காணப்படுகிறது. சிவலிங்கத் திருமேனியில், புலியின் பாதங்கள் காணப்படுகின்றன. லிங்கத்தின் மேல் பாகத்தில் ஜடாமுடி காணப்படுகிறது.இப்படி ஜடாமுடி தரித்த சிவலிங்கத் திருமேனியை நாம் திருவையாறு, சிவசைலம் ஆகிய ஒரு சில தலங்களில் மட்டுமே தரிசிக்க முடியும். இந்த அம்சம் இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
இக்கோவிலின் மூன்றாவது பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கிறார். இந்த தட்சிணாமூர்த்தியின் இடது கால் சிம்ம வாகனத்தின் மீதும், வலது கால் முயலகன் மீதும் ஊன்றியபடி காணப்படுகிறது. இது வேறெங்கும் காண முடியாத ஓர் அம்சமாகும். அதனால் இத்தல குருவிற்கு 'சிம்ம குரு தட்சிணாமூர்த்தி' என்று பெயர். தட்சிணாமூர்த்தியின் அருகில் சனகாதி முனிவர்களும், பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர்கள் தங்கள் துணைவியருடனும் இருப்பது போன்ற அமைப்பு உள்ளது. இவர் ஒரு காதில் குண்டலமும், மறு காதில் தோடும் அணிந்து சிவசக்தி வடிவமாக காட்சியளிக்கிறார். அதனால் இவரை அர்த்தநாரீஸ்வர தட்சிணாமூர்த்தி என்றும் அழைக்கின்றனர். இந்தப் பெயருக்கு காரணம், இவருடைய இடது கால் அம்மனின் வாகனமான சிம்மத்தின் மீதும், வலது கால் நடராஜப்பெருமானுக்கு இருப்பதுபோல் முயலகன் மீது உள்ளதாலும் ஆகும். பெயருக்கு ஏற்றாற்போல், இவருடைய முகத்தில், ஆண்மையின் மிடுக்கையும் பெண்மையின் நளினத்தையும் நாம் காணலாம்.
சிம்ம ராசிக்காரர்களின் பரிகாரத் தலம்
இத்தலம் சிம்மராசிக்காரர்களுக்கு பரிகாரத் தலமாக விளங்குகின்றது. மன வேற்றுமை உடைய தம்பதியர்கள் இவரை வழிபட்டால், அவர்கள் இடையே ஒற்றுமை மேலோங்கும். இத்தலத்தை வழிபட்டால் திருமண வரம்,குழந்தை பாக்கியம், பதவி உயர்வு முதலிய நற்பலன்கள் கிட்டும்.