திண்டுக்கல் அபிராமி கோவில்
இரண்டு மூலவர் சன்னதிகள் கொண்ட கோவில்
திண்டுக்கல் நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் அபிராமி கோவில். பத்மகிரியென்பது திண்டுக்கல்லின் பழைய காலத்து பெயர். இதற்கு திண்டீச்சுரம் என்ற பெயரும் உண்டு.இது தேவார வைப்புத் தலங்களில் ஒன்று.
பொதுவாக கோவில்களில் ஒரு மூலவர் சன்னதிதான் அமைந்திருக்கும். ஆனால் இத்தலத்தில், இரண்டு மூலவர் சன்னதிகள் உள்ளது. இக்கோவிலில் எழுந்தருளியுள்ள இரண்டு இறைவன்களின் திருநாமம் காளகத்தீசுவரர் , பத்மகிரீசுவரர். அம்பிகைகளின் திருநாமம் ஞானம்பிகை, அபிராமியம்பிகை.
ஆரம்பத்தில் இங்குள்ள மலையில் பத்மகிரீஸ்வரர் கோவில் இருந்தது. விழாக்காலங்களில் அடிவாரத்திற்கு சுவாமி வருவார். இதற்காக தற்போதைய அபிராமியம்மன் கோயில் இருக்குமிடத்தில், ஒரு மண்டபம் அமைக்கப்பட்டது. இப்பகுதியை ஆண்ட அச்சுத தேவராயர், காளஹஸ்தியில் அருளும் காளஹஸ்தீசுவரர் மீது அதீத பக்தி கொண்டிருந்தார். அவரை தன் இருப்பிடத்தில் வழிபட எண்ணிய அவர், 1538ல் இம்மண்டபத்தில் காளஹஸ்தீசுவரரையும், ஞானாம்பிகையையும் பிரதிஷ்டை செய்தார். 1788ல் அன்னியர்கள் இப்பகுதியில் இருந்தபோது, மலை மீதிருந்த பத்மகிரீசுவரர், அபிராமி அம்பிகையை இம்மண்டபத்தில் பிரதிஷ்டை செய்தனர். பிற்காலத்தில் இந்த மண்டபமே கோவிலாகக் கட்டப்பட்டது. தற்போது இங்கு இரண்டு சிவன், இரண்டு அம்பிகையர் தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர்.
சிவத்தலம் என்றாலும் இங்கு அம்பிகையே பிரதானம் பெற்றிருக்கிறாள். இப்பகுதியில் 'அபிராமி கோயில்' என்றால்தான் தெரியும். இவளது உண்மையான பெயர், 'அபிராமா அம்பிகை' என்பதாகும். அபிராமம் என்றால் அழகு என்று பொருள். இப்பெயரே காலப்போக்கில் அபிராமி என மருவியது. 'அபிராமா' என்ற பெயர் மந்திர அட்சரத்துடன் அமைந்ததாகும். இப்பெயரைச் சொல்லி அம்பிகையை வழிபடும்போது, அம்பாளுக்குரிய அத்தனை மந்திரங்களையும் சொல்லி வழிபட்ட பலன் கிடைக்கும். தை அமாவாசையன்று இவளுக்கு விசேஷ பூஜை நடக்கும். திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகியவை இங்கு காலையில் நடக்காமல் மாலை வேளைகளில் நடைபெறுகிறது.
பிரார்த்தனை
ராகு, கேது தோஷம் நீங்க, செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்க, இழந்த வேலை மீண்டும் கிடைக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்க கிருத்திகை நட்சத்திர நாட்களில் சிவனிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.