பாபநாசம் ராமலிங்கசுவாமி கோவில்
108 சிவலிங்கங்கள், மூலவர்களாக அருள்பாலிக்கும் தலம்
கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில், 15 கி.மீ. தொலைவில் உள்ள பாபநாசம் என்ற ஊரில் அமைந்துள்ளது ராமலிங்கசுவாமி கோவில். இறைவன் திருநாமம் ராமலிங்கசுவாமி. இறைவியின் திருநாமம் பர்வதவர்த்தினி. ஸ்ரீ ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் இந்த ராமலிங்கர். அதனாலேயே, ராமேசுவரம் போல் இங்கேயும் ராமலிங்கர் என்கிற பெயருடன் அருள்பாலிக்கிறார் சிவபிரான். ராமபிரானின் பாவம் நீங்கப் பெற்றதால் இத்தலத்திற்கு 'பாபநாசம்' என்ற பெயர் ஏற்பட்டது. கீழ்ராமேசுவரம் என்ற பெயரும் உண்டு.
பொதுவாக சிவன் கோவில்களில் கருவறையில் ஒரு சிவலிங்கத்தை நாம் தரிசிக்க முடியும். ஒரு சில சிவாலயங்களில், பிரகாரத்திலும் மேலும் சில சிவலிங்கங்களை நாம் தரிசிக்க முடியும். ஆனால் இக்கோவிலில் மூலவர் ராமலிங்க சுவாமியின் வலப்புறம் உள்ள மண்டபம் போன்ற அமைப்பிலுள்ள சன்னதியில் மூன்று நீண்ட வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாக 106 லிங்கங்கள் உள்ளன. இப்படி நீண்ட வரிசையில் அமைந்திருக்கும் சிவலிங்கங்களை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. 108 வது சிவலிங்கமான அனுமந்த லிங்கம் சன்னதி, கோயிலுக்கு வெளியே உள்ளது. பக்தர்கள் மூலஸ்தான லிங்கம் தவிர, மற்ற 107 லிங்கங்களுக்கும் தாங்களே பூ தூவி வணங்கலாம். பிரதோஷத்தன்று மதியம் 107 லிங்கங்களுக்கும் விசேஷ பூஜை நடக்கும்.
இலங்கையில் சீதையை மீட்ட, ராமபிரான் ராமேசுவரத்தில் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க சிவபூஜை செய்து, அயோத்தி திரும்பினார். ஆனாலும், ராவணனின் சகோதரர்கள் கரண், தூஷணன் ஆகியோரைக் கொன்ற தோஷம், தங்களைப் பின்தொடர்வதை உணர்ந்தார். தோஷம் நீங்க 107 சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்தார். ஆஞ்சநேயரை காசிக்கு அனுப்பி, ஒரு லிங்கம் கொண்டு வரச் செய்தார். அதையும் சேர்த்து 108 லிங்கங்களைப் பூஜித்த ராமபிரான், தோஷம் நீங்கப்பெற்றார். பிரதான சிவனுக்கு, ராமரின் பெயரால் 'ராமலிங்கசுவாமி' என்ற பெயர் ஏற்பட்டது. அனுமன் கொண்டு வந்த லிங்கம் அவரது பெயரால் 'அனுமந்தலிங்கம்' என்ற பெயரில் உள்ளது. ராமலிங்கசுவாமி சன்னதி விமானம் ராமேசுவரம் கோவில் அமைப்பிலும், அனுமந்த லிங்க சன்னதி விமானம் காசி விசுவநாதர் கோவில் அமைப்பிலும் உள்ளது. எனவே, காசி, ராமேசுவரம் செல்ல முடியாதோர் இங்கு வழிபடுகின்றனர்.
பிரார்த்தனை
குடும்ப தோஷம், தொழிலில் தேக்கம், சுபகாரியத் தடைகள் உள்ளிட்ட கவலைகள் எதுவானாலும் அவற்றுக்கான பரிகாரமாக ஒரே வழிமுறை தான் இங்கு அனுசரிக்கப்படுகிறது. அதாவது இந்த ஆலயத்தை முழுமையாக 108 முறை வலம் வந்து வழிபடுவது தான்.