திருவாரூர் ஐநூற்று விநாயகர் கோவில்
மூலவர், உற்சவர் ஆகிய இருவருக்கும் தனித்தனியே சன்னதி அமைந்த விநாயகர் கோவில்
திருவாரூர் அருகே விஜயபுரம் காந்தி சாலையில், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற ஐநூற்றுப்பிள்ளையார் கோயில் உள்ளது. மூலவர் ஐநூற்று விநாயகர்.
கணபதி வழிபாட்டுக்கெனவே பார்க்கவ புராணம் என்னும் விநாயக புராணத்தைத் திருவாவடுதுறை கச்சியப்ப முனிவர் தமிழில் இயற்றியிருக்கிறார். சக்திகள் ஐம்பத்தொரு வகை என்றும், அதனால் கணபதியும் ஐம்பத்தொரு வகை என்றும் வரலாறு கூறுகிறது. ஐம்பத்தொரு சக்திகளையும் தன்னிடத்தே கொண்ட பிள்ளையார் கோவில் கொண்டதால் திருவாரூரில் இருக்கும் பிரசித்தி பெற்ற பிள்ளையார் கோயிலுக்கு ஐம்பத்தொரு பிள்ளையார் கோவில் எனப் பெயர் வந்தது. அது மருவி ஐநூற்றொரு பிள்ளையார் என்றும், இப்போது ஐநூற்றுப்பிள்ளையார் என்றானது. ஐநூற்று விநாயகரை வணங்கினால், ஐந்நூறு மடங்கு நற்பலன்கள் கிடைக்கும் என்பதால் இந்தப் பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
வழக்கமாக கணபதி கோயில்களில் மூலவருக்கு மட்டுமே கருவறையில் தினசரி பூஜை நடக்கும். ஆனால் இக்கோவிலில் மூலவர், உற்சவர் ஆகிய இருவருக்கும் தனித்தனியே சன்னதி அமைந்துள்ளது. தனித்தனியாக சன்னிதி கொண்டுள்ளதோடு, இருவருக்குமே தினமும் ஆராதனைகள் நடைபெறுகிறது. நின்ற கோலத்தில் உள்ள உற்சவர். திருவிழா நாட்களில் நான்கு வீதிகளில் வீதியுலா வருகிறார். மூலவர், உற்சவர் தவிர, பிராகாரத்திற்குள் 18 பிள்ளையார்கள் தனித் தனி மாடங்களில் உள்ளனர்.
ஐநூற்று விநாயகரை வணங்கினால் ஐஸ்வர்யம் பெருகும். அறிவு, ஆற்றல், பெருமை, கல்வியோடு ஆனந்த வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.