௳ (முகப்பு)

View Original

மதுரகாளியம்மன் கோவில்

திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே திறந்திருக்கும் கோவில்

பெரம்பலூர் மாவட்டத்தில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூருக்கு 8 கி.மீ. முன்னதாகவே உள்ளது சிறுவாச்சூர். இங்கு அமைந்திருக்குந் மதுரகாளியம்மன் கோவில், வாரத்தில் இரு நாட்கள், அதாவது திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே திறந்திருக்கும்.

வேதங்களில் பழைமையான வேதம் ரிக் வேதம். ரிக் வேதத்தில், 'அதிதி' என்கிற பெண் தெய்வம் பற்றிய குறிப்பு வருகிறது. அதிதியை தேவர்களின் தாய் என்கின்றனர். அன்னை காளி அதிதியாய், ஒரு கிராமத்துக்கு வந்து, அந்த ஊருக்கு அனுகிரகம் செய்து அங்கேயே கோவில் கொண்டு அருள்புரிகிற அற்புதத் தலம்தான் சிறுவாச்சூர்.

மதுரகாளியம்மனின் அருட்கோலம்

இங்குக் கோயில் கொண்டிருக்கும் மதுரகாளியம்மன், நான்கு அடி உயரத்தில் வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். உடுக்கை, பாசம், சூலம், அட்சய பாத்திரம் ஆகியனவற்றைத் தன் திருக்கரங்களில் ஏந்தியிருக்கிறாள். இடது திருவடியை மடித்து அமர்ந்து வலது திருவடியை சிம்மத்தின் மீது ஊன்றியிருக்கிறாள். ஆதிசங்கரர் இந்தப் பகுதி வழியாக வந்தபோது தாகம் ஏற்பட்டதாகவும் அப்போது மதுரகாளியம்மன் இந்தத் திருவடிவத்தோடு தோற்றமளித்து அங்கே ஒரு தீர்த்தத்தை ஏற்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்துக்குள் விநாயகரைத் தவிரவேறு தெய்வங்கள் இல்லை.

மாவிளக்கு நைவேத்தியம்

இங்குப் பிரதான நைவேத்தியம் மாவிளக்கு. மாவிளக்கு ஏற்றி வழிபட வேண்டிய எண்ணம் ஈடேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆனால் மற்ற ஆலயங்களைப் போல மாவாகச் செய்து கொண்டு சென்று மாவிளக்கு இட இங்கு அனுமதியில்லை. அரிசியாகக் கொண்டு சென்று அங்கே இருக்கும் உரலில் இட்டு இடித்து அங்கேயே மாவைத் தயார் செய்து மாவிளக்கிடவேண்டும். பூஜையின் போது நடைபெறும் முதல் தீபாராதனை, செல்லியம்மன் உறையும் மலை நோக்கியே காட்டப்படும். பின்பே மதுரகாளியம்மனுக்குக் காட்டப்படும்.

மாவிளக்கு பிரார்த்தனை பலன்கள்

இங்கு மாவிளக்கு செலுத்தி அம்மனை வேண்டிக்கொள்ள தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்கின்றனர் பக்தர்கள். திருமணத் தடை, குழந்தையின்மை உள்ளவர்கள் அம்மனை தரிசித்து வழிபட விரைவில் குறைகள் நீங்கப் பெறுவர். இங்கு அங்கப் பிரதட்சிணம் செய்து வேண்டிக்கொள்ள, காணாமல் போன பொருள்கள் திரும்பக் கிடைக்கும் என்றும் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங்கள் மாறி லாபம் ஏற்படும் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள்..

See this map in the original post