௳ (முகப்பு)

View Original

கோலாப்பூர் மகாலக்ஷ்மி கோவில்

சகல செல்வங்களையும் தந்தருளும் மகாலட்சுமி

கோலாப்பூர் மகாலட்சுமி கோவில், மகாராட்டிர மாநிலத்தில் கோலாப்பூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. கரவீரபுரம் என்பது இந்த தலத்தின் முந்தைய பெயர். இந்த இடத்தில் மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த கோலாசுரனை, தேவி மகாலட்சுமியாக வந்து அழித்தாள். அவன் இறக்கும் தருவாயில், இந்த இடம் தன் பெயரால் அழைக்கப்பட வேண்டும் என்று விண்ணப்பிக்க அதன்படி கோலாப்பூர் ஆயிற்றாம். லக்ஷ்மி அஷ்டோத்திரத்தில் ‘நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி..’ என்று குறிப்பிடப்படுவது, இத்தருணத்தில் நினைவு கூறத்தக்கது. பாரதத்தில் பற்பல இடங்களில் நிறுவியுள்ள சக்தி பீடங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த சக்தி பீடம் இந்துக்களுக்கு மிகவும் சிறப்பு பெற்ற ஆறு சக்தி பீடங்களில் ஒன்றாகும்.

இந்த இடத்தின் சிறப்பு, இங்கே ஒருவன் வந்து மகாலட்சுமியை வழிபடுவதால் அவன், அவனுடைய விருப்பங்கள் அனைத்தையும் துறந்து, இறைவனடி அடைந்து முக்தி பெறுவான் அல்லது அவனது அனைத்து விருப்பங்களையும் அன்னை மகாலட்சுமி நிறைவேற்றி வைப்பாள் என்று இந்துக்கள் நம்புவதே ஆகும்.

இக்கோவில் கன்னடத்து சாளுக்கிய மன்னர்களால் சுமார் 1300 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது.

கருவறையில் மகாலட்சுமி, நான்கு கரங்களுடன், மகுடம் தரித்து, மூன்று அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள்.மகாலட்சுமியின் பின்புறம்,அவள் வாகனமான சிங்கத்தின் உருவச்சிலை இருக்கிறது. மகாலட்சுமியின் மகுடத்தில் சேஷ நாகத்தின்(இறைவன் மகாவிஷ்ணுவின் நாகப் பாம்பு) உருவமும் செதுக்கப் பெற்றுள்ளது. மகாலட்சுமியின் நான்கு கரங்களில், கீழ் வலது கரத்தில் ஒரு கிச்சிலி பழத்தையும், வலது மேல் கரத்தில் கௌமோதகி என்ற தண்டாயுதம் ஒன்றையும், இடது மேல் கரத்தில் கேடகம் என்ற கவசத்தையும் மற்றும் கீழ் இடதுகரத்தில் பானபாத்திரம் என்ற கிண்ணத்தையும் வைத்துக் காணப்படுகிறாள்.

மகாலட்சுமியை சூரிய பகவான் வழிபடும் கிரண் உற்சவம்

பொதுவாக கோவில்களில் மூலவர் வடக்கு அல்லது கிழக்கு முகமாக அமைந்திருக்கும். இந்தக் கோவிலில், தேவியின் உருவச்சிலை மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. மேற்கு சுவர்ப்பகுதியில் ஒரு திறந்த ஜன்னல் அமைந்துள்ளது, அதன் வழியாக கதிரவனின் ஒளிக்கீற்று வருடத்தில் இரு முறை தேவியின் பாதங்களை தொட்டு திருமுகத்தை பளிச்சிடும். சூரியனின் ஒளிக் கீற்றுக்கள் இந்த ஜன்னல் வழியாக தேவியின் பாதங்களை தொட்டு வணங்கி, பின்னர் மறைவது ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும். அம்பாளின், பாதம், மார்பு, திருமுகம் ஆகிய மூன்று பகுதிகளிலும் சூரியனின் ஒளிக் கீற்றுக்கள் விழுவது, இங்கு கிரனோத்ஸவ்('கிரண் உற்சவம்') என்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் 31 ஜனவரி, 1 பிப்ரவரி, 2 பிப்ரவரி, 9 நவம்பர், 10 நவம்பர், 11 நவம்பர் ஆகிய நாட்களில், இந்த விழா கொண்டாடுகிறார்கள். ஜனவரி 31 மற்றும் நவம்பர் 9 ஆம் தேதிகளில் சூரியனின் ஒளி, மகாலட்சுமி தாயாரின் பாதங்களில் படுகிறது. பிப்ரவரி 1 மற்றும் நவம்பர் 10 தேதிகளில் சூரியனின் கதிர்கள் மகாலட்சுமி தாயாரின் மார்பின் மீது படுகின்றன. பிப்ரவரி 2 மற்றும் நவம்பர் 11 தேதிகளில் தாயாரின் முழு உருவத்தின் மீதும் சூரியனின் ஒளி கதிர்கள் விழுகின்றன. மகாலட்சுமி விக்ரகத்தின் மீது சூரியனின் ஒளி படும் போது அவரை வணங்குவது மிகுந்த நன்மை தரும்.

சகல செல்வங்களையும் தரும் இக்கோவிலுக்கு சென்று வந்தால், வாழ்வில் சுபிட்சம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சென்ற வருடம் ஆங்கில புத்தாண்டு அன்று வெளியான பதிவு

வலது பாதத்தில் ஆறுவிரல்கள் உள்ள சுந்தர மகாலட்சுமி

https://www.alayathuligal.com/blog/6hye6c68r7f4c5sb88ewfe4ranpa6k

சூரியபகவான் மகாலட்சுமி தேவியை வழிபடும் காணொளிக் காட்சி

கோலாப்பூர் மகாலட்சுமி ஆரத்தி தரிசனம்!

See this map in the original post